முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - காங்கிரஸ் அரசுக்கு கடந்த 60 ஆண்டுகளாக ஏழைகள் மீது இல்லாக அக்கரை தற்போது வந்துள்ளது என்று  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு வந்தபோது பிரதமர் மோடி ரூ.10 லட்சம் மதிப்பிலான கோட், சூட் அணிந்திருந்தார். இதை கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் அரசு ‘சூட் பூட் சர்க்கார்’, அந்த அரசுக்கு ஏழைகளின் மீது அக்கறை இல்லை என்று குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒர் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சூட்கேஸ் சர்க்காரை விட சூட் பூட் சர்க்கார் எவ்வளவோ மேலானது.

கடந்த 60 ஆண்டுகளாக ஏழைகளை கண்டுகொள்ளாத காங்கிரஸுக்கு தற்போது திடீரென அக்கறை பிறந்துள்ளது. மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் நாட்டில் இன்னமும் பசி, பட்டினி தொடர்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் மெகா ஊழல்கள் நாட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளின. எனது ஓராண்டு ஆட்சியில் சிறு ஊழல் புகார்கூட எழவில்லை. மோசமான காலம் முடிந்துவிட்டது. இனிமேல் நாட்டுக்கு நல்ல காலம்தான்.  அரசின் திட்டங்கள் நாட்டின் கடைகோடி குடிமகனுக்கும் சென்றடைய வேண்டும். அதற்காக கிராமங்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்துகிறோம். வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, ரயில், சாலை வசதிகளை மேம்படுத்துவது, 24 மணி நேர மின் விநியோகம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுப்பது, இளைஞர்களின் திறன் மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். 

கருப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக புதிய சட்டத்தை இயற்றி உள்ளோம். வரிஏய்ப்பை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுரங்க ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் வெளிப்படையாக நடைபெற்றுள்ளன.  அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் தேவை. அதற்கு நிலம் கையகப்படுத்தும் மசோதா அவசியம். இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மசோதாவை முடக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் விரைவில் உண்மையை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதற்காக பயிர் இழப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இழப்பீட்டை பெறுவதற்கான நடைமுறை விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  வேளாண் சந்தையில் விலை ஏற்றம், இறக்கத்தைக் கட்டுப்படுத்த ரூ.500 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களை அளிப்பதற்காக அண்மையில் கிசான் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுடனும் ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுடனும் வர்த்தக உறவை வலுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன்.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.2.13 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பான் உறுதியளித்துள்ளது.

இதேபோல் சீன தரப்பில் ரூ.1.2 லட்சம் கோடியை முதலீடு செய்ய அந்த நாடு முன்வந்துள்ளது. அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவும் கனடாவும் புதிதாக அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவுடன் இணைந்து ஹெலிகாப்டர்களை தயாரிக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள் ளது.  அனைத்து மத நம்பிக்கை களுக்கும் மதிப்பளிப்பது இந்தியாவின் சிறப்பு இயல்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மதச் சுதந்திரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலத்திலும் அது தொடரும் எனது அரசில் மதம், இனம் என்ற பாகுபாட்டுக்கு இடமில்லை. 125 கோடி மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து