முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள்: தனி விளம்பரம் வெளியிட எல்.ஐ.சி நிறுவனத்துக்கு உத்தரவு

வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, ஆக.13: எல்.ஐ.சி நிறுவனத்தில் காலியாக உள்ள வளர்ச்சி அதிகாரி (பயிற்சி) பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து தனி விளம்பரத்தை வெளியிட வேண்டும் என எல்.ஐ.சி நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி எம்.முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

நான் எம்.பி.ஏ படித்து விட்டு, தற்போது எல்.ஐ.சி நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி எல்.ஐ.சி நிறுவனம் (தென் மண்டலம்) தனது இணையதளத்தில், நடப்பாண்டுக்கான வளர்ச்சி அதிகாரி (பயிற்சி) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியி்ட்டது. அதில், மொத்தமுள்ள 664 காலிப் பணியிடங்களில் பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய 3 சதவீத இடங்கள் குறித்து அதில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எனவே, எல்.ஐ.சி நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும், சட்டப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட எல்.ஐ.சி நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படி ஒதுக்க வேண்டிய 3 சதவீத இடங்களை காலியாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், அந்த 3 சதவீத இடங்களை நிரப்புவதற்காக தனி விளம்பரத்தை எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்