முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்: தமிழக அரசு-ஜெர்மன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

வெள்ளிக்கிழமை, 9 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னை நகரின் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் பருவமழை பொய்ப்பு காரணமாக கோடை காலங்களில் வறண்டு விடுகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் சென்னை நகரம் குடிநீர் அபாயத்தில் சிக்கித் தவிக்கிறது.கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நெம்மேலியில் தற்போது இயங்கி வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அருகே புதிதாக 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

நெம்மேலி புதிய திட்டத்துக்கு ரூ.1,371 கோடியே 86 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, அதனை செயல்படுத்த தேவையான நிதி ஆதாரங்களை வழங்கும்படி மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது.மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, இதனை ஜெர்மன் நாட்டின் அரசு நிதி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தது. அதன்பேரில், ஜெர்மன் அரசு நிதி நிறுவன ஆய்வுக் குழுவின் திட்ட மேலாளர் வெரினா வில்லாண்ட், சீனியர் செக்டார் நிபுணர் அனிர்பான் ருண்டு, தொழிற்நுட்ப நிபுணர் கிளாஸ் மெர்டஸ், சோசியல் நிபுணர் ஹெய்டர் அப்பாஸ் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் 4 நாள் பயணமாக கடந்த 6-ந் தேதி சென்னை வந்தனர்.

அவர்கள் கடந்த 7-ந் தேதி, நெம்மேலியில் தற்போது இயங்கி வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை பார்வையிட்டு, புதிதாக 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர்.
இந்தநிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலகத்தில், மேலாண்மை இயக்குநர் டாக்டர் சந்திரமோகனிடம், ஜெர்மன் குழுவினர் நேற்று காலை நெம்மேலி திட்டம் தொடர்பாக மீண்டும் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மதியம், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் முதன்மை நிதி செயலாளர் சண்முகத்தையும் சந்தித்து பேசினர்.

இதுகுறித்து தமிழக அரசு உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைப்பதற்கு தேவையான நிதி ஆதாரங்கள் முழுவதையும் வழங்க ஜெர்மன் குழுவினர் இசைவு தெரிவித்துள்ளனர்.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் பனீந்தர ரெட்டி, தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இன்று நடக்கிறது.

இதில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட உள்ளனர். அதன்பின்னர் ஜெர்மன் நாட்டு குழுவினர் தங்கள் 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தங்கள் நாட்டுக்கு திரும்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த நிதிகள் ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, 30 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும், இதன் மூலம் மத்தியசென்னை, தென்சென்னையை சேர்ந்த 9 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்