முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 6 மே 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம்சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு கடந்த 1-ம் தேதி விசாரித்தது.

செந்தில் பாலாஜியின் சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் ஆஜராகி, இந்த ஜாமீன் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்கவும், 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஜாமீன் மேல்முறையீடு மனுவுக்கு ஏப்ரல் 29-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடுகிறோம். விசாரணை 3 மாதங்களுக்குள் நிறைவடைய வாய்ப்பில்லை என்பதால் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. 

அப்போது அமலாக்கத்துறை சார்பில் கனு அகர்வால் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்து விட்டோம். அதை மனுதாரரிடமும் அளித்து விட்டோம். சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராவதில் சில தொழில்நுட்ப சிக்கல் உள்ளது. எனவே விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார்.

செந்தில்பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம்சங்கருடன் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் ஆஜராகி, அமலாக்கத்துறையின் பதில் மனு கடந்த இரு தினங்களுக்கு முன்தான் கிடைத்தது. பதில் மனு மீது வாதிட தயார். மனுதாரர் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீலை பார்த்து, தாமதமாக தாக்கல் செய்த பதில் மனுவால் எங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என தெரிவித்தனர். அதற்கு அமலாக்கத்துறையின் வக்கீல் வருத்தம் தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை மே 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். அதன்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான வாதங்களை முன் வைக்க 5 நாட்கள் அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கக் கூடாது என செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார் எனவும் வாதிடப்பட்டது.

இறுதியில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து