கோவையில் தொடரும் பணப்பிரச்சினை

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      கோவை

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே கோவை மாவட்டத்தில் கடுமையான பண தட்டுப்பாடு நிலவி வருகிறது. வங்கிகளில் பணம் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 90 சதவீதத்துக்கு மேலான ஏ.டி.எம்.கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பூட்டீயே கிடக்கிறது. இதனால் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு பூட்டி கிடந்த ஏ.டி.எம். மையத்துக்கு மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஏ.டி.எம்களில் பணம்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதற்கிடையே கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் நேற்று பணம் எடுக்கவும் டெபாசிட் செய்யவும் கூட்டம் அலைமோதியது. ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்வதற்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய, பணம் எடுக்க திடண்டிருந்தனர். இதுபோல் திறக்கப்பட்டு இருந்த ஏ.டி.எம்களிலும் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: