முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கால்நடைச் சந்தை ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு மாறுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      ஈரோடு

ஈரோடு கால்நடைச் சந்தையில் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையில் வியாபாரிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். 30 ஆண்டுகால சந்தை வரலாற்றில் முதல் முறையாக இப்புதிய முறையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. தென்னிந்தியாவிலேயே புகழ்மிக்க கால்நடைச் சந்தை ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெறுகிறது. புதன்கிழமை அடிமாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வாரந்தோறும் வருவது வழக்கம். இவற்றைக் கொள்முதல் செய்ய தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து செல்கின்றனர். அடிமாடுகள் கேரளத்துக்கு அதிக எண்ணிக்கையில் இறைச்சிக்காக கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன.

  ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை

அதேநேரத்தில் கறவை மாடுகளைப் பொருத்தவரை கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிர, கோவா மாநிலங்களுக்கு அதிகம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால், இப்போது அங்கு வறட்சி அதிகமாக நிலவுவதாலும், பணத் தட்டுப்பாடு காரணமாகவும் இந்த மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் எண்ணிக்கை தற்போது முற்றிலும் குறைந்துவிட்டது. பணத் தட்டுப்பாடு காரணமாக சந்தை வியாபாரிகள் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கு மாறி வருகின்றனர். பழைய ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த அடுத்த 3 வாரங்கள் இச்சந்தையில் பழைய ரூபாய் நோட்டுகள்தான் புழக்கத்தில் இருந்தன. ஆனால், 4, 5-ஆவது வாரங்களில் 50 சதவீதம் பழைய நோட்டு, 50 சதவீதம் புதிய நோட்டு என்ற அடிப்படையில் வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த வாரம் புது நோட்டுகள் மட்டும்தான் புழக்கத்தில் இருந்தன. சில வியாபாரிகள், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செல்லிடப்பேசி மூலமாக ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்தனர். இதுகுறித்து, ஈரோடு கால்நடைச் சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது பொதுவாக வாரந்தோறும் 550 பசுமை மாடுகள் வருவது வழக்கம். ஆனால், இந்த வாரம் 250 மாடுகள் மட்டுமே வந்தன. அதேபோல 400 எருமைகளுக்குப் பதில் 100 எருமைகள் மட்டுமே வந்தன. 300 வளர்ப்புக் கன்றுகளுக்கு பதில் 75 மட்டும்தான் வந்திருந்தன.

வங்கி அதிகாரிகள்

 வறட்சி, பணத் தட்டுப்பாடு காரணமாக பிற மாநில வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில், கேரளத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் வங்கி அதிகாரிகள் வந்திருந்தனர்.  தரகர்கள் உதவியுடன் மாடுகளைக் கொள்முதல் செய்து அம்மாநில விவசாயிகளுக்கு வங்கிக் கடன் உதவியுடன் மாடுகளை வழங்கினர்.  மாடுகளுக்கு உரிய பணத்தை காசோலை மூலமாக விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கினர். இந்த வாரம் முதல் முறையாக செல்லிடப்பேசி மூலமாக வியாபாரிகள் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்தனர். வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான குறுந்தகவல் தங்களது செல்லிடப்பேசிக்கு வந்ததும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்