நபார்டு வங்கி மூலமாக ரூ.ரூ.9,566 கோடி கடன் வழங்க இலக்கு ஈரோடு கலெக்டர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      ஈரோடு

 

ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் வங்கியாளர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்துப் பேசியதாவது

ஈரோடு மாவட்டத்தில் அடுத்த நிதியாண்டில் நபார்டு வங்கி மூலமாக ரூ. 9 ஆயிரத்து 566 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்ட அறிக்கை மூலமாக முன்னுரிமை கடனாக ரூ. 9 ஆயிரத்து 566 கோடி கொடுப்பதற்கான வாய்ப்புள்ளது.

 

இதில், விவசாயத்துக்கு 62 சதவீதம் என ரூ. 5 ஆயிரத்து 879 கோடி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிர்க் கடனாக ரூ. 3 ஆயிரத்து 430 கோடியும், விவசாயம், விவசாயம் சார்ந்த மற்ற தொழில்களுக்கு முதலீட்டுக் கடனாக ரூ. 2 ஆயிரத்து 447 கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ. 1,854 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 1,831 கோடியும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

100 சதவீதம் விழிப்புணர்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து அப்பகுதியில் உள்ள மக்களிடையே வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்குவது, ஏ.டி.எம். கார்டு பெறுதல், செல்லிடப்பேசி மூலமாக வங்கிக் கணக்கில் தங்களது சேமிப்புக் கணக்கில் இருந்து பணப் பரிவர்த்தனை எவ்வாறு செய்வது என்பது குறித்து உரிய பயிற்சியை அளித்து 100 சதவீதம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து நன்கு தெரிந்துகொள்ளும் அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றார். கூட்டத்தில், 2017-2018 ஆம் ஆண்டுக்கான நபார்டு வங்கியின் ரூ. 9 ஆயிரத்து 566 கோடி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் பிரபாகர் வெளியிட, கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் சோலை பெற்றுக்கொண்டார். மேலும், நபார்டு வங்கியின் திட்ட அறிக்கை குறித்து நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் விரிவாக எடுத்து கூறினார். இதில், தனித் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராதாமணி, ரிசர்வ் வங்கி உதவிப் பொதுமேலாளர் சரவணன், ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: