ஊழல் குற்றம்சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய அமைச்சர் பதவி விலகினார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      உலகம்
sussan ley(N)

சிட்னி  - அரசுப் பணத்தை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான அமைச்சர் சூசன் லேய் தற்காலிகமாக பதவி விலகியுள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சர்
ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களின் ஆதரவுடன் முன்னாள் பிரதமர் டோனி அபாட்-டை பதவி நீக்கம் செய்த மால்கோம் டர்ன்புல், கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றார். மால்கோம் டர்ன்புல் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரம், முதியோர் நல்வாழ்வு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிக்கும் சூசன் லேய் என்ற பெண்மணியின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன.

எதிர்க்கட்சியினர் புகார்
தனிப்பட்ட முறையில் ஹெலிகாப்டர்களில் சுற்றுலா சென்ற செலவினங்களை அரசு கணக்கில் சேர்த்ததாகவும், குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கோல்ட் கோஸ்ட் பகுதியில் ஆடம்பர மாளிகை வாங்கியதாகவும் எதிர்க்கட்சியினர் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளனர். இதனால், ஆளும் லிபரல் கட்சியின் செல்வாக்கு வரலாறு காணாத அளவுக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரபல ஊடகங்கள் சமீபத்தில் நடத்திய கருத்து கணிப்பின்படி, அந்நாடு கடந்த 20 ஆண்டுகாலமாக மிக மோசமான தலைமையின்கீழ் இயங்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


பிரதமர் கோரிக்கை
மேலும், சமூக பாதுகாப்பு நிதி திட்டத்தை பிரதமர் தவறான வகையில் கையாண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களிடையே அரசின்மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் சூசன் லேய்-ஐ பதவி விலகுமாறு பிரதமர் மால்கோம் டர்ன்புல் கேட்டு கொண்டார்.

பதவி விலகினார்
இதையடுத்து, தன்மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரிகள் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்துவதற்கு வசதியாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் தனது அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக சூசன் லேய் அறிவித்துள்ளார். சட்டத்தை மீறிய வகையில் நான் எதுவும் செய்யவில்லை என்பதை இந்த விசாரணையின் முடிவில் மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுவரை மக்களுக்கு ஏற்படும் இடையூறுக்காக மன்னிப்பு கோருகிறேன் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூசன் லேய் குறிப்பிட்டுள்ளார்.

Bigg Boss 2 Tamil | Bigg Boss Day 1 Promo 3 | 18.06.2018

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

ரம்ஜான் பிரியாணி | Ramzan Special Chicken Biryani in Tamil | Iftaar Special Biryani Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: