முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் - அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா உறுதி

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளர் சசிகலா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை முற்றிலுமாக நீக்கிடக் கோரும் தீர்மானத்தை முன்மொழியவும், அதனை அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த குரலால் நிறைவேற்றவும் வலியுறுத்துவோம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

குந்தகம் விளைவிக்கும் பீட்டா

மேலும், அந்நிய நாட்டில் உருவான அமைப்பாகிய `பீட்டா' தமிழ்நாட்டின் கலாச்சார பெருமைகளுக்கு குந்தகம் விளைவிக்கின்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சட்ட ரீதியாக மேற்கொள்வோம்.

மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதைக் கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் இந்திய அரசியல் சாசனத்தில் எத்தனையோ திருத்தங்களை, மாற்றங்களை, புதிய முன்மொழிவுகளை கொண்டுவந்திருக்கும் மேதகு பாராளுமன்றத்தின் இரு அவைகளும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளார்ந்த வருத்தத்தை உணர்ந்துகொண்டு, தமிழர்தம் பாரம்பரிய கலாச்சார பெருமைக்கு ஓர் அடையாளமாகிய ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க ஓர் சட்டத் திருத்தத்தை முன்மொழிய வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பமாகக் கடைசிவரை இருந்தது என்பதனை உணர்த்தும் அவரது கடந்த கால கடிதங்கள், கோரிக்கைகள், நீதிமன்ற முன்னெடுப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் இத்தருணத்தில் மத்திய பா.ஜ.க. அரசு கருத்தில் கொண்டு, மறைந்த அந்த மாபெரும் மக்கள் தலைவியின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், களத்தில் நின்று போராடி வரும் லட்சோபலட்ச மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களின் சார்பாகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்