18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வேண்டுகோள்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      கன்னியாகுமரி
07

கன்னியாகுமரி

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. தர்மராஜன் முன்னிலையில், தேசிய வாக்காளர் தினவிழா நிகழ்ச்சி நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைமையேற்று கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தெரிவித்ததாவது:-

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் இளைஞர்கள் மற்றும் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் தேசிய வாக்காளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

 

இந்த நாளில், கலைநிகழ்ச்சிகள், பேரணிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே வாக்களிப்பது அவசியம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்றும், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றும், அவர்களிடையே எடுத்துக்கூறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், தங்களது பெயர், முகவரி, பிறந்தநாள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதோடு, உங்களது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை நீங்களே உறுதி செய்துகொள்ள முடியும். வாக்காளராக பதிவு செய்ய தவறிய 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளவேண்டும்.

 

அதனை தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 81 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும், நினைவு பரிசுகளும் வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ, நாகர்கோவில் கோட்டாட்சியர் ஆர். ராஜ்குமார், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அருளரசு, தேர்தல் தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன், இந்துக்கல்லூரி முதல்வர் டி. சிதம்பரதாணு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்: