முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 16,779 வழக்குகள் பதிவு - ரூ. 35 லட்சம் அபராதம் வசூல்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரில் கடந்த ஓராண்டில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 16,779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 35 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி உத்தரவின்பேரில் தி.மலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கனி தலைமையில் போலீசார் திருவண்ணாமலை நகரில் செங்கம் சாலை, போளூர் சாலை, தேரடி வீதி, மாடவீதி, மத்திய பேருந்து நிலையம், வேட்டவலம் சாலை, திண்டிவனம் சாலை, கலெக்டர் அலுவலகம் அருகே அவலூர்பேட்டை சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டுதல், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது, அதிக உயரம் ஏற்றிச்செல்லுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, வாகனங்களில் பதிவெண் எழுதாமல் வாகனம் ஓட்டியது, ஒரே வாகனத்தில் 3 பேர் சென்றது, நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டியது, என கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக 16, 779 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ. 34 லட்சத்து 55 ஆயிரத்து 380 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 1062 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடமிருந்து ரூ. 2 லட்சத்து 43 ஆயிரத்து 700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கனி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் உயிரிழப்பை தடுக்க கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் வாகனம் ஓட்ட வேண்டும், போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்து ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் கட்டாயம் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசாருடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்