உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்   வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 500 மாணவர்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 353 மாணவியர்களுக்கும், பெஸ்கி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 251 மாணவியர்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 43 மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் 1158 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  வழங்கி விழாப்பேருரையாற்றினார்.

 மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த தொலைநோக்குத் திட்டமான, பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கிய மிகவும் அற்புதமான திட்டமாகும்.  பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், பெண் கல்வியின் இடைநிற்றலை தடுப்பதற்காகவும், பள்ளியில் பயிலும் பெண்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வந்தனர்.

2006-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு  மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களை சந்தித்து, எங்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அம்மா அவர்களிடம் சமர்ப்பித்து, உடனடியாக அமைச்சரவையை கூட்டி, மாணவர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்க ஆணையிட்டார்கள்.  மேலும், பள்ளிக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் அற்புதமான திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு, தொடர்ந்து 5 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டும், மீண்டும் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்கள்.

எல்லா துறைகளுக்கும் எடுத்துக்காட்டாக பள்ளி கல்வித்துறையை முன்னுதாரணமாக வைத்து, கல்வித்துறைக்கென நிதியாண்டில் அதிகமான நிதியை ஒதுக்கி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா கல்வி உபகரணங்கள் (வரைகலைப்பெட்டி, சீருடைகள், காலனிகள், சேனிட்டரிநாப்கின்கள், வரைபடம்) போன்றவை தொடர்ந்து பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் ஓராண்டுகூட இத்திட்டம் நீடிக்கவில்லை.  உடனடியாக அம்மாநில முதலமைச்சர் இத்திட்டம் என்னால் நிறைவேற்ற முடியாது என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் தமிழகத்தில்  மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா  தொடர்ந்து 6-வது ஆண்டாக இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்காவில்கூட இத்திட்டம் இல்லை.  ஆனால், தமிழகத்தில் மாணவ மாணவியர்களை கல்வியில் மேம்பாடு அடைவதற்காக இத்திட்டம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  கடந்த 5 ஆண்டுகளில் 36 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 1,25,578 மாணவர்களுக்கு ரூ.205 கோடி மதிப்பீட்டிலும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூ.13 கோடியே 10 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 1,30,939 மாணவ மாணவியர்களுக்கு ரூ.48 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.  உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூ.5 கோடியே 75 லட்சம் மதிப்பிலான 12,468 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தனியார் பள்ளிகளைக் காட்டிலும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் பெண்களுக்கு தனியே கழிவறை கட்டப்பட்டுள்ளது.   மறைந்த முதலமைச்சர் அம்மா  அறிவித்த அனைத்துத் திட்டங்களும் தொலைநோக்குத் திட்டங்களாகும் என  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தெரிவித்தார். 2015-16ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்ற பாடப்பகுதி ஆசிரியர்களுக்கு தலா ரூ.1000 வீதம் பரிசு வழங்கினார்.

இவ்விழாவில், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: