முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணை

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      நீலகிரி

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

                                       முன்னணி நிறுவனங்கள்   

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டம் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை போன்ற மாவட்டங்களிலிருந்து தொழில் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தி பெருவாரியான இளைஞர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 2014_2015ம் ஆண்டில் மூன்று கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில் 2060 இளைஞர்கள்  பங்கேற்று 13 முன்னணி நிறுவனங்கள் மூலம் 615 இளைஞர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2015_2016ம் ஆண்டில் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதில் 900 இளைஞர்கள் பங்கேற்று 14 முன்னணி நிறுவனங்கள் மூலம் 206 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

                                              வேலைவாய்ப்பு முகாம்

இந்த நிதியாண்டில் வட்டாரத்திற்கு ஒரு வேலைவாய்ப்பு முகாம் வீதம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் முதல் கட்டமாக கூடலூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 28.12.2016 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 20 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு இம்முகாமிற்கு வருகை தந்த 1151 இளைஞர்களில் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகள் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கரால் வழங்கப்பட்டது.

                     275 பேருக்கு ஆணை

 தற்போது இரண்டாம் கட்டமாக குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 25.01.2017 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 35 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட 1600 இளைஞர்களில் 275 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகள் மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு ஆணை பெற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு எதிர்காலத்தில் சிறப்பாக திகழ வேண்டும். வேலைவாய்ப்பு வழங்கிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு ஆணை பெற்ற இளைஞர்களை நல்ல முறையில் கண்காணித்து அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் அவர்களின் எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்திட அனைத்து வழிகளிலும் உதவிட வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கூறினார். இம்முகாமில் மகளிர் திட்ட இயக்குநர்(பொ) எஸ். முருகேசன், கல்லூரி முதல்வர் டாக்டர் வி.கே.ஷூலா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொ) மாரப்பா மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்