முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் ஏப்ரலில் அமலுக்கு வரும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      ஈரோடு

ஈரோடு பிச்சக்காரன்பள்ளம் ஓடையில் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமலுக்கு வரும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  ஈரோடு மாவட்டத்தில் சாய, தோல் தொழிற்சாலைகளினால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக எழுந்த புகாரையடுத்து அனைத்து ஆலைகளும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்திக் கண்காணித்து வருகின்றனர்.

 1.80 கோடி

 மேலும், ஈரோடு மாநகரப் பகுதிகளில் உள்ள பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய ஓடைகளில் வரும் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீராலும் ஆறுகள் மாசடைந்து வருகிறது இதைத் தடுக்கும் வகையில் முதல்கட்டமாக ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் ஈரோடு அருகே சூளை பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

  தற்போது இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு இடத்தை சுத்தப்படுத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு ஏப்ரல் மாதத்துக்கு அனைத்துப் பணிகளையும் முடித்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் பணிகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கழிவுநீரை சுத்திகரிப்பு

 இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

  ஈரோடு மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு முழுமையாக தீர்வு காணும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆலைகள், கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய ஆலைகள் என 700 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் சாயநீர் மற்றும் கழிவுநீரை 100 சதவீதம் சுத்தம் செய்து குடிக்க உகந்ததாக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.

  இந்த நிறுவனம் உலக அளவில் அபுதாபியில் கடந்த மாதம் நடந்த நீர்ப் பாதுகாப்பு தொடர்பாக கருத்தரங்கில் கலந்து கொண்டது. இதில் உலக அளவில் 6 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் இந்த பெங்களூரு நிறுவனமும் ஒன்று. 

புதிய தொழில்நுட்பம்

 

 இந்த நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் மூலமாக ஒரு லிட்டர் கழிவுநீரை சுத்தம் செய்ய 3 பைசா மட்டுமே செலவாகிறது. மேலும் திடக்கழிவுகளும் குறைந்த அளவே வருகிறது. இதனை முதல்கட்டமாக ஈரோட்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலைகளின் பங்களிப்போடு ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

  2 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் ஒரு நிலையத்தில் சாக்கடை கழிவுநீரும், மற்றொரு நிலையத்தில் சாயநீரும் சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது. இதற்கானப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள், இயந்திரங்கள் பொருத்துதல் போன்ற பணிகளை முடித்து ஏப்ரல் மாதத்தில் இருந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

  இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் 56 இடங்களில் ரூ. 142 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை தொடங்க அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார். இந்தத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தும்போது சுற்றுச்சூழல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்