மங்கோலியாவில் அடையாளம் இட்ட பறவைகள்:7 ஆயிரம் கி.மீ.,பறந்து கூந்தன்குளம் வருகை.

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

மங்கோலியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட பட்டைத்தலை வாத்துகள் 7 ஆயிரம் கி.மீ.,தூரம் பறந்துநெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ளன. தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பல்வேறு அமைப்புகளால் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பொங்கல் கால பறவைகள் கணக்கெடுப்பு "இ பேர்டு’ என்ற அமைப்பினரால் ஜனவரி 15 முதல் 18 ம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. பிப்ரவரி 3,4,5 தேதிகளில் "ஏ ட்ரீ’ அமைப்பினர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். இந்த இரண்டு கணக்கெடுப்புகளிலும் பறவைகள் காணக்கிடைக்காதது ஆர்வலர்களை ஏமாற்றமடைய செய்தது. இந்த கணக்கெடுப்பு குறித்து ஏ ட்ரீ அமைப்பின் மதிவாணன் கூறுகையில், 2016ம் ஆண்டு கணக்கெடுப்பில் 62 வகைகளை சேர்ந்த 22 ஆயிரத்து 400 பறவைகள் கண்டறியப்பட்டன. அவற்றில் வெளிநாட்டு பறவைகளான நீலச்சிறகு வாத்து, செம்பட்டை தலை வாத்து, களியன் என தமிழில் பெயரிடப்பட்டுள்ள பறவை இனங்கள் வந்திருந்தன. ஆனால் இந்த ஆண்டு மழையின்மையால் வறட்சி நிலவுகிறது. கணக்கெடுப்பு நடத்திய 40 குளங்களிலும் தண்ணீர் இல்லை. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 90 சதவீத பறவைகள் வரவில்லை. உள்ளூர் பறவைகளை மட்டுமே ஒன்றிரண்டை காண முடிந்தது என்றார். இந்நிலையில் நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் புதிய பறவைகளின் கூட்டத்தை பறவை ஆர்வலர்கள் பதிவு செய்தனர். குளிர் பிரதேச நாடான சைபீரியா நாட்டு பறவையான "பார் கெடட் கூஸ்’ எனப்படும் வரித்தலை வாத்து அல்லது பட்டைத்தலை வாத்துகளை காணமுடிந்தது. இந்த பறவைகள் 2011 ஜூலை 29ல் மங்கோலியா நாட்டில் உள்ள கோங்குர் ஏரியில் அங்குள்ள மங்கோலியன் அகாடமி ஆப் சயின்ஸ் என்ற பல்கலையின் ஆராய்ச்சியாளர்கள் பட்டைத்தலை வாத்துக்களின் கழுத்தில் பச்சை நிற பட்டையணிவித்து அனுப்பியுள்ளனர். ஒரு பறவையின் கழுத்தில் பி66 என்ற எண் உள்ளது. இத்தோடு அடையாளமிடப்பட்ட வேறு சில பறவைகளும் இங்கு வந்துள்ளதாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலய காப்பாளர் பால்பாண்டி தெரிவித்தார்.பறவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும் நெல்லை தூய சவேரியார் கல்லூரி விலங்கியல் மாணவர் ஜோசுவா கூறுகையில், சைபீரீயாவில் இருந்து தென்ஆப்ரிக்காவிற்கு செல்லும் அமுர்பால்கான் எனப்படும் வல்லூறு பறவைகள் செல்லும் வழியில் ஓய்வுக்காக இந்தியாவில் தங்குகின்றன. தற்போது நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தார். மழையின்மை, வறட்சி காலத்திலும் வெளிநாட்டு பறவைகளின் வருகை பறவை ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: