பாதிரிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 1 மார்ச் 2017      கடலூர்
Mar 01-a

கடலூர்.

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 12-வது சுற்று தீவிர கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில்  நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் கட்டுப்படுத்தும் திட்டம்-12ம் சுற்று மார்ச் 1 முதல் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த 12ம் தவணையில் கடலூர் மாவட்டத்தில் 3.50 லட்சம் மாட்டினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அளிக்கப்படவுள்ளது. இதற்காக கிராமங்கள் தோறும் சென்று மாட்டினங்களுக்கு தடுப்பூசி அளிக்க கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 60 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது சினை மாடுகள், கறவை மாடுகள் உட்பட அனைத்து மாடுகளுக்கும் மூன்று மாத வயதிற்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் இலவசமாக அளிக்கப்படவுள்ளன. மேலும், கறவை பசுக்கள் மற்றும் சினையுறா பசுக்களுக்கு அரசால் வழங்கப்படும் மினரல் மிக்ஸர் பாக்கட்டினை இலவசமாக கலெக்டர்  வழங்கினார்கள். மேற்படி முகாமில் பாதிரிக்குப்பம், கே.என்.பேட்டை, குமாரப்பேட்டை, அரிசி பெரியாங்குப்பம், கன்னிமாநகர் பகுதிகளை சேர்ந்த கால்நடைகள் பயன்பெற்றன.இம்முகாமில் மண்டல இணை இயக்குநர் டாக்டர் பி.மோகன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் ஆர்.வி.எஸ்.ராகவன், கடலூர் கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் ஆர்.மோகன், டாக்டர் எஸ்.சுரேஷ், உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள், கடலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தான லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: