முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத்திட்டப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      நாமக்கல்

நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்கள் குறித்தும், நியாய விலைக்கடை விற்பனை செயலி கருவியின் செயல்பாடு குறித்தும், அக்கருவியில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் பொது விநியோகத்திட்டப்பொருட்களை வாங்கி பயன்படுத்துவது குறித்தும் நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு நியாய விலைக்கடைகளில் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (04.03.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் வட்டம், நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட நல்லிபாளையத்தில் நல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நல்லிபாளையம் நியாயவிலைக்கடை, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டுப்பாட்டிலுள்ள லட்சுமி நகர் நியாயவிலைக்கடை, திருவள்ளுவர் காலணி நியாயவிலைக்கடை, ஜெட்டிகுளத்தெரு நியாயவிலைக்கடை, மோகனூர் சாலை, கூட்டுறவு நகர், காந்தி நகர் நியாயவிலைக்கடை, கொண்டிசெட்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கொண்டிசெட்டிபட்டி நியாயவிலைக்கடை உள்ளிட்ட பல்வேறு நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மு.ஆசியா மரியம் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்தும், தரம் குறித்தும் ஆய்வு செய்தார். பதிவேடுகளை ஆய்வு செய்து சரிபார்த்தார். நியாயவிலைக்கடை மின்னனு விற்பனை முனைய செயலி கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும், அக்கருவியில் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு அத்தியாவசியப்பொருட்கள் வாங்க வருகை தந்திருந்த குடும்ப அட்டைதாரர்களிடம் குடும்ப அட்டைகளுக்கு அரசு வழங்கி வருகின்ற விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முழுமையாகவும் தரமானதாகவும், சரியான எடையிலும் கிடைக்கிறதா எனக்கேட்டறிந்தார். அதற்கு குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து பொருட்களும் முழுமையாகவும், தரமானதாகவும், சரியான எடையிலும் கிடைக்கின்றது என தெரிவித்தனர். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஆதார் எண் அட்டைகள் மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் அட்டைகளையும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களிடம் அளித்து தங்களது ஆதார் எண்களை நியாயவிலைக்கடை விற்பனை செயலி கருவியில் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரையில் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக அவரவர் பகுதிகளுக்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் ஆதார் குறித்த விவரங்களை உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் அனைத்து நியாயவிலைக்கடை பணியாளர்களும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களை தரமாகவும், எடையளவு குறையாமலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமெனவும் கலெக்டர் மு.ஆசியா மரியம் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.அசோகன், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ உட்பட வழங்கல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்