பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏரிகளை புனரமைக்கும் பணிகள்:அமைச்சர்கள் கே.சி.வீரமணி, டாக்டர்.நீலோபர் கபில் துவக்கி வைத்தனர்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      வேலூர்
1

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளை புனரமைக்கும் பணிகளை நேற்று(13.03.2017) வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், அனந்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனந்தாபுரம் ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகளை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் துவக்கி வைத்தனர்.இந்த துவக்க விழாவில் கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு காரணங்களால் சுற்றுசூழல் பாதிப்படைந்து வருகிறது. இதனால் மழைப்பொழிவு குறைவாக கிடைக்கப்பெறுவதால் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தோடு மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த 2016-17 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புகளோடு இணைந்து அவர்களின் பங்களிப்போடு நீர்நிலைகளை புனரமைத்து, விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும். இந்த திட்டம் வெற்றியாக முடிவடைந்தல் நீர்தேக்கங்கள் உருவாக அதன்மூலம் விவசாயம் செய்ய நீர் வளம் பெரும். குடிமராமத்து திட்டத்தில் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளபட உள்ளன.

இப்பணிகளில் ரூ.10.00 இலட்சத்திற்கும் குறைவான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பணிகள் விவசாய சங்கங்கள், பாசன சபைகள், ஆயக்கட்டுதாரர் மற்றும் ஆயகட்டுதாரர்களின் தொகுப்பின் மூலம் நேரடி நியமன அடிப்படையில் அவர்களாலேயே மேற்கொள்ளப்படும். இப்பணிகள் பொதுப்பணித்துறையால் திட்டமிடப்பட்டு பொதுமக்களால் செயல்படுத்தப்படும் பணிகள் பொதுப்பணித்துறையால் கண்காணிக்கப்படும். ரூ.10.00 இலட்சத்திற்கு மேற்பட்ட பணிகள், நீர்வள ஆதாரத்துறையின் மூலம் நடைமுறையில் உள்ள ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதத்திற்கான தொகையை பணியினை செயல்படுத்த உள்ள விவசாயிகள் கூட்டமைப்பு அல்லது ஆயக்கட்டுதாரர்கள் அவர்களிடமிருந்து பங்களிப்பாக பணியாட்கள் மூலமான உழைப்பு அல்லது கட்டுமான பொருட்கள் அல்லது ரொக்கப்பணம் இவற்றில் ஏதேனும் ஒரு வடிவத்தில் பெறப்படும். மீதமுள்ள 90 சதவீத தொகையுடன் இப்பணியானது நியமன அடிப்படையில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 34 ஏரிகளை புனரமைக்க ரூ.300.00 இலட்சத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், அனந்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அனந்தாபுரம் ஏரியும் ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் இந்த ஏரியானது ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. மேலும், வரும் நிதியாண்டில் (2017-2018) ரூ.300.00 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்டமாக இத்திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 100 ஏரிகள் ரூ.1200 இலட்சங்களில் புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் விவசாய நிலங்களை வைத்துள்ள விவசாயிகளுக்குதான் சமுதாயத்தில் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும். ஆகவே விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். ஆகவே விவசாயிகள், கிராமமக்கள் இத்திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), சு.ரவி (அரக்கோணம்), கண்காணிப்பு பொறியாளர் (நீர்வளம்) கரூர் இராமகிருஷ்ணன், செயற் பொறியாளர் அன்பரசு, உதவி செயற் பொறியளர்கள் கார்த்திகேயன், இரமேஷ், விஸ்வநாதன், மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: