திருவண்ணாமலை அருகே மங்கலம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ போர் மன்னலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் 185வது ஆண்டு ஸ்ரீ போர்மன்னலிங்கேஸ்வரர் சுவாமி தேர் திருவிழா நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இதையட்டி வெள்ளியன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ விநாயகர் ஊர்வலம், 8 மணிக்கு பக்தி சொற்பொழிவு, 9 மணிக்கு தெய்வீக நாடகமும் நடைபெற்றது. சனிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பாலமுருகன் பூ பல்லக்கு ஊர்வலமும், 8 மணிக்கு நாட்டுப்புற கலைநிகழ்ச்சியும், ஞாயிறன்று இரவு 7 மணிக்கு பராசக்தி ஊர்வலமும், 8 மணிக்கு கரகாட்டம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சியும், திங்களன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ பரிவர்த தேவதைகள் ஊர்வலமும், இரவு 8 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றமும், 10 மணிக்கு சிவன்சக்தி ருத்ரதாண்டவம் நள்ளிரவு 12 மணிக்கு வானவேடிக்கையுடன் கரகாட்டமும், 12.30 மணிக்கு மகாகும்பமும் அருள்வாக்கும் நடைபெற்றது. நேற்று (செவ்வாய்கிழமை) ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் ரத உற்சவம் (தேர்திருவிழா) நடைபெற்றது. இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.அரங்கநாதன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மு.அருள்பழனி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, திருவண்ணாமலை நகர கழக செயலாளர் ஜெ.எஸ். (எ) ஜெ.செல்வம் ஒன்றிய கழக செயலாளர்கள் ஏ.கே.ஆர்.ஜெயபிரகாஷ், ஆர். மதியழகன், ராஜா (எ) வி.தேவராஜன், தமிழக தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ப.உ.சத்தியபிரகாஷ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.சிவக்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சு.மோகனசுந்தரம், ஆய்வாளர் சு.தேவராஜ், அறங்காவலர் குழு என்.பரணி, கே.குமாரி கலைவாணன், என்.வேடி, எஸ்.ஜெகநாதன் மற்றும் மங்கலம் பகுதியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி.மலை தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் அறங்காவலர் குழு தலைவருமான மு.அருள்பழனி மற்றும் விழாக்குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: