கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      கன்னியாகுமரி
02

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் மீன்வள பெண்களுக்கு தேங்காய் ஓட்டிலிருந்து கலைநயமிக்க கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியினை, தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் , மீன்வள பெண்களுக்கு தேங்காய் ஓட்டிலிருந்து கலைநயமிக்க கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கான திறன்மேம்பாட்டு பயிற்சியினை, கன்னியாகுமரி, மெஸர்ஸ், எஸ்.வி. இன்டஸ்டிரீஸ் (பில்லர் மருத்துவமனை அருகில்) நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்து, தெரிவித்ததாவது:-நமது மாவட்டத்தில், மீனவர்களின் நலன் கருதி, தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிவருகிறது. மேலும், மீன்வள பெண்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக உயர்த்துவதற்காகவும், நிலையான வருமானத்தை பெருக்கிடும் வகையில், பல்வேறு கட்டங்களின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மீன்வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ‘நீடித்த வாழ்வாதாரத்திற்கான மீன்வள மேலாண்மை" திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள கடலோர மீன்வள மகளிருக்கு தேங்காய் ஓட்டிலிருந்து கலைநயமிக்க கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று துவக்கி வைக்கப்பட்டது. இப்பயிற்சியானது, காலை 9.15 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறும். இவ்வாண்டில், 15 மீனவ மகளிருக்கு ரூ.2.5 இலட்சம் நிதியுதவியுடன் நான்கு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ளும் மீனவ மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3,000ஃ-மும் மற்றும் பயிற்சி நிறைவு பெற்றதுடன், அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டில் (2016-17) இங்கு பயிற்சி பெற்ற மீன்வள பெண்கள், தற்போது சுமார் ரூ. 5 ஆயிரம் மாத சம்பளத்திற்காக பணியாற்றி வருகிறார்கள். உங்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ள எஸ். ஜெயகுரூஸ் சுமார் 30 வருடங்கள் இத்துறையில் அனுபவம் பெற்றவர். மேலும் மத்திய, மாநில அரசின் விருதுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்து மீன்வள பெண்களும், இதனை நன்றாக பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரம் உயர்த்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.பின்னர், கடந்த ஆண்டில் பயிற்சி பெற்ற 10 மீன்வள பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (மீன்வளத்துறை) லேமேக் ஜெயக்குமார், உதவி இயக்குநர்கள் ரூபர்ட் ஜோதி (நாகர்கோவில்), தீபா (கன்னியாகுமரி), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஆர். ராஜ ஜெயபாலா, உதவி திட்ட அலுவலர் அந்தோணி சிலுவை, ஹீல் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சிலுவை வஸ்தியான், பங்குதந்தைகள் அன்ரோஸ் (புதுகிராமம் பங்குதந்தை), நஸ்ரேன் (கன்னியாகுமரி பங்குதந்தை) மற்றும் மீன்வள பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: