முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு : கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்விற்கான பயிற்சி மாணவர்களுக்கு இலவச வழிகாட்டி கையேட்டினை வழங்கி இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தொடங்கி வைத்தார்.

 

பயிற்சி வகுப்பு

 

பயிற்சி வகுப்பு மற்றும் இலவச வழிகாட்டி கையேட்டினை வழங்கி மாவட்ட கலெக்டர் பேசியதாவது:தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வானது ஒவ்வொரு பயிற்சி மாணவர்களுக்கும் அவசியமான ஒன்றாகும். போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பொது அறிவை வளர்த்து கொண்டு தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதே போல் எந்த ஒரு பாடமாக இருந்தாலும் புரிந்து அதை பயன்படுத்தக் கூடிய வகையில் தெளிவாக இருக்க வேண்டும். போட்டி தேர்வில் நாம் நினைக்கும் விடைகள் எது பொருந்தாது என்ற வகையில் முதலில் தெரிந்து எது மிக சரியானது என்பதை தெரிந்தெடுக்க வேண்டும். நாம் மேலோட்டமாக படிக்கும் பொழுது எதை தேர்வு செய்வது என்பது கடினமாக இருக்கும். உலக அளவில், தேசிய அளவில் அறிவியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகியவற்றை கற்கால நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி படிக்க வேண்டும்.

போட்டித் தேர்வில் கலந்து கொள்ளுபவர்கள் மிக குறைந்த வயது மற்றும் அதிக வயதில் இருப்பார்கள். இப்பயற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் சிறிது நேரம் குழுவாக கலந்தாலோசித்து படிக்க வேண்டும். எந்த அளவிற்கு போட்டித் தேர்விற்கு தயார் செய்கிறோமோ அந்த அளவிற்கு அதிக மதிப்பெண் பெற முடியும்.

போட்டித் தேர்வில் குறிப்பாக முதன்மை பாடம், பொதுஅறிவு இவற்றை தெளிவாக படிக்க வேண்டும். ஆழ்ந்து படித்தோம் என்றால் தேர்வு சந்திப்பது எளிதாகும். அதிகப்படியான கேள்விகளை படித்து அதற்குண்டான விடைகளை தெரிந்து கொள்ள வேண்டும். திரும்ப திரும்ப படிக்க வேண்டும். பயிற்சி வகுப்பில் படிப்பது மட்டுமல்லாமல் வீட்டிலும் படிக்க வேண்டும். கடந்த காலங்களில் போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் அவர்களிடம் நல்ல கருத்துகளை கேட்டறிய வேண்டும். ஓவ்வொருவரும் மிக நன்றாக தேர்விற்கு தயாராக இருந்தோம் என்றால் நேரம் மிச்சம் ஆகும். கேள்விக்கான விடை எது என்ற சந்தேகம் தீர்க்கப்படும். போட்டி தேர்வுகளில் நேர மேலாண்மை மிக முக்கியமானதாகும்.

எனவே இப்பயிற்சி வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் வாழ்த்தினார்.

இப்பயிற்சி வகுப்பில் துணை இயக்குநர் தமிழ்செல்வி(வேலைவாய்ப்பு), உதவி இயக்குநர் ப.முருகேசன்(ஆதிதிராவிடர் நலத்துறை), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வாசுதேவன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா, மற்றும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்