ஒசூர் அருகே குறைந்த நீரில் சொட்டுநீர் பாசனத்தில் வெள்ளரி சாகுபடி: நல்ல வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

புதன்கிழமை, 22 மார்ச் 2017      கிருஷ்ணகிரி

ஒசூர் பகுதிகளில் குறைந்த நீரில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் வெள்ளரி சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அதிக விளைச்சலும் அதன் மூலம் நல்ல வருவாயும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி பயிர்கள் கருகி வருகிறது. ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசனங்களின் மூலம் விவசாய சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல ஒசூர் அருகே கெலவரப்பள்ளி அணை அருகிலுள்ள புனுகன்தொட்டி, கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி, சித்தனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் குறைந்த பரப்பளவில் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களை மேற்கொண்டுள்ளனர்.ஒசூர் பகுதியிலும் பருவமழை பொய்த்ததால், தண்ணீர் இல்லாத பல்வேறு கிராமங்களில் கோடைகாலத்திற்கு ஏற்ற வெள்ளரி சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். சொட்டுநீர் பாசனம் மூலம் வெள்ளரி சாகுபடி செய்யப்படும் போது குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படுகிறது. செடிகள் நட்டு 45 முதல் 50 நாட்களில் வெள்ளரி பிஞ்சுகாய்கள் அறுவடைக்கு தயாராகிறது, தொடர்ந்து 3 மாதங்கள் வரை வெள்ளிரியை தோட்டங்களிலிருந்து பறிக்கலாம், 8 முதல் 10 முறை அறுவடை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு அதிக விளைச்சலும் கிடைக்கிறது.ஒசூர் பகுதிகளில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் வெள்ளரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அதிக விளைச்சலும் அதன் மூலம் நல்ல வருவாயும் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்தைகளில் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், ஒரு மூட்டைக்கு 700 முதல் 800 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: