முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் சிவஞானம். தலைமையில் விபத்தில்லா பட்டாசு உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் -

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்.- விருதுநகர் மாவட்டம், சிவகாசி டான்பாமா திருமண மண்டபத்தில் விபத்தில்லா பட்டாசு தொழில் மேற்கொள்வது குறித்து அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் போர்மென்களுடனான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம். தலைமையில் நடைபெற்றது.
 இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது :-
 விருதுநகர் மாவட்டத்தில், சமீப காலமாக பட்டாசுத் தொழிற்சாலைகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வெடிவிபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றினைத் தடுக்கும் பொருட்டு இந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இம்முகாமின் முக்கிய நோக்கமே பட்டாசு தொழிற்சாலைகளில் அடிப்படை நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் அவசியத்தினை எடுத்துரைக்கவே ஆகும்.
 பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து ஏற்பட முக்கிய காரணம் கவனக்குறைவே ஆகும். உரிமத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள பட்டாசு இனங்களை மட்டுமே உரிம நிபந்தனைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்ய வேண்டும். உரிமம் அளிக்கப்பட்ட தொழிற்சாலை பகுதிக்குள் மட்டுமே பட்டாசு இனங்களை உற்பத்தி செய்யவேண்டும். அனுமதி அளிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் மட்டுமே தொழிலாளர்களை ஈடுபடுத்தப்பட வேண்டும். உரிமதாரர் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும். தொழிற்சாலையை குத்தகைக்கு விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மேற்கண்ட அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதனால் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்ய முடியும். விபத்தில்லா பட்டாசு உற்பத்தியினை உறுதி செய்யவும், அனுமதி பெறாதா பட்டாசு உற்பத்தி நிலையங்களை கண்டறியவும் வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் அடங்கிய நான்கு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்காண்காணிப்புக்குழுக்கள் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளை திடீர் தணிக்கை செய்து, தணிக்கையின் போது விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
 அரசு விபத்தில்லா பட்டாசு உற்பத்தியை உறுதி செய்யும் நோக்கில் எண்ணற்ற பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துள்ளது. பட்டாசு உற்பத்தியாளர்கள் அதனை முழுமையாக பின்பற்றி அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியை உறுதிசெய்யமுடியும். ஒரு சில பட்டாசு தொழிற்சாலையில் ஒரே நாளில் அதிக பணிகள் செய்து நிறைய வருமானம் ஈட்ட வேண்டும் என்ற தவறான எண்ணத்தினால் தான் விபத்துக்கள் நடைபெறுகிறது. தொழிற்சாலைகள் முதல் பணியாக தங்கள் தொழிற்சாலையில் ஆவணங்களை முறையாகப்பயன்படுத்த வேண்டும். ஒரு நிலையான வழிமுறை கொண்ட பட்டாசு உற்பத்தியினை மேற்கொண்டு விபத்தில்லா பட்டாசு உற்பத்தியினை மேற்கொள்ள அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களும் முன்வர வேண்டும்.
 சட்ட விரோதமாக வெடி பொருள் உற்பத்தியை தூண்டும் இடைத்தரகர்களின் பேச்சைக் கேட்டு ஏமார வேண்டாம், அரசு உரிமமின்றி கள்ளத்தனமாக பட்டாசு உற்பத்தி செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பட்டாசு தொழிற்சாலையின் கட்டிடத்தினை விட்டு, மரத்தடியிலோ அல்லது திறந்த வெளியிலோ பட்டாசு தயாரிப்பு செய்வது பொதுமக்களுக்கு தெரிய வந்தால் வருவாய் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க முன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்கள்.
 மேலும், இக்கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை நிர்வாகிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
 இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன்.இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், சிவகாசி சாராட்சியர் அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., இணை இயக்குநர் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் சீனிராஜ், இணை இயக்குநர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பாலகிருஷ்ணன், தனி வட்டாசியர் சங்கரபாண்டியன் உட்பட அரசுதுறை உயர் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், போர்மேன்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்