முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டம் சத்துள்ள உணவுகளை உண்டு, உடல் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும். மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் பேச்சு.

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல் வேளாளர் செவிலியர் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற உலக காசநோய் தின அனுசரிப்பு கூட்டத்தில் உலக காசநோய் தினம் தொடர்பான கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்கள் மற்றும் காசநோய் திட்டத்தில் பங்குபெற்ற மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

          உலக காசநோய் தின அனுசரிப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   தலைமையேற்று பரிசுகள் வழங்கி பேசியதாவது.

          ஆண்டுதோறும் மார்ச் 24-ம் நாள் உலக காசநோய் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாணவியர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்குபெற்ற உலக காசநோய் தின விழிப்புணர்வு மனித சங்கிலி சிறப்பான முறையில் அரசு தலைமை மருத்துவமனை அருகே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உலக காசநோய் தின அனுசரிப்பு கூட்டம் இங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காசநோய் என்பது மிகவும் கொடிய நோய் என்ற எண்ணத்தில் இருந்து பல்வேறு சிகிச்சை முறைகளின் காரணமாக இன்றைய தினம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காசநோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக மருத்துவர்கள் அளிக்கின்ற சிகிச்சை அந்த நோயை குணமாக்கவில்லை என்ற நிலை ஏற்பட்ட பொழுது உலக அளவில் அதற்கான மருத்துவமுறைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது.

தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சைகளை தொடர்ந்து காசநோய் படிப்படியாக குறைந்து குணமடைந்தனர். மேலும் இந்த சிகிச்சையின் சிறப்பாக காசநோயை ஏற்படுத்தக்கூடிய கிருமி மீண்டும் உருவாகாமல் தடுக்கும் வகையில் இருந்தது. ஒருவர் காசநோய் சிகிச்சையினை  8 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இடையில் நிறுத்தும் பட்சத்தில் காசநோயின் ஏற்படுத்தக்கூடிய கிருமி மீண்டும் அதிகமாக உருவாகக் கூடிய நிலை உருவாகும்.  அரசு மருத்துவர்கள் காசநோய் பாதிப்புக்குள்ளான நபரை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து நல்லமுறையில் சிகிச்சை அளித்து பார்த்துக்கொள்ள வேண்டும். பாதிப்பிற்குள்ளான நபர் சரியான முறையில் மருந்துகளை அரசு மருத்துவமனையில் இருந்து வாங்கிச்செல்கிறார்களா, அந்த மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்கிறார்களா என்பதையெல்லாம் மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும். பின் மருத்துவர்கள் காசநோய் பாதிப்பிற்குள்ளான நபர் முற்றிலுமாக குணமடைந்து விட்டார் என்பதை உறுதி செய்திட வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் 2,400 நபர்களுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு 78 ஆரம்ப  சுகாதார நிலையங்களில் இதற்கான பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றது. அவ்வாறு கண்காணிக்கப்பட்டு தொடர் சிகிச்கை அளித்த காரணத்தினால் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. தொடர்ந்து இந்த ஆண்டும் காசநோய் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் காசநோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். இன்றைய தினம் பொதுமக்கள் காசநோய் என்பது மிகவும் கொடியநோய் என்றும், ஒருவர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டால் அவர் அந்த பாதிப்பில் இருந்து குணமடைய முடியாது என்ற எண்ணத்தில் உள்ளனர். நாம் நடத்தும் அனைத்து விழிப்புணர்வுகளின் நோக்கமே பொதுமக்களின் இதுபோன்ற தவறான எண்ணங்களில் இருந்து வெளிவர மருத்துவர்கள், மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றோர் தெளிவான விளக்கங்கள் அளித்து பொதுமக்களின் அறியாமையை அகற்ற வேண்டும். பொதுமக்கள் யாரும் காசநோய் என்று பயப்பட தேவையில்லை. இந்த நோய்க்கு தற்பொழுது உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பூரண குணமடைய செய்ய முடியும். காசநோய் என்பது கிருமியால் ஏற்பட்டாலும் ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு சக்தியை நாம் நமது உடலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான உணவு முறைகளை பின்பற்றி வாழ வேண்டும்.  இதுபோல் ஒருவர் வாழ்வாரேயானால் எந்த விதமான நோயும் அவரை வந்தடையாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும். எனவே அனைவரும் சத்துள்ள உணவுகளை உண்டு, உடல் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என தெரிவித்தார்.

          தொடர்ந்து, உலக காசநோய் தின விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரைபோட்டிகளில் வெற்றி பெற்ற வேளாளர் செவிலியர் கல்லூரி முதலாமாண்டு மாணவியர்கள் 3 நபர்கள் மற்றும் காசநோய் திட்டத்தில் சிறப்பான முறையில் பணியாற்றி பங்களித்த கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் என 10 நபர்கள் ஆகியோருக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்   வழங்கினார்.

          முன்னதாக ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகில் உலக காசநோய் தின விழிப்புணர்வு  மனித சங்கிலியினை மாவட்ட டாக்டர்.எஸ்.பிரபாகர்   தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.த.கனகாசலகுமார், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பெ.பாலுசாமி, துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்)  (பொ) மரு.க.து.கனகராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார், வேளாளர் செவிலியர் கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ்.பிரபாவதி மற்றும் கல்லூரி மாணவியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்