கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      கடலூர்

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,., தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு கலெக்டர் நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 328 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இம்மக்கள் குறைகேட்புக்கூட்டத்தில் கலெக்டர் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் 2016-17ம் ஆண்டிற்கான மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு கறவை மாடுகள், தையல் இயந்திரங்கள் வாங்குவதற்கும், மளிகை கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் வைப்பதற்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.3 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.மேலும், கலெக்டர் கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் கல்வி உரிமைச் சட்டம், முழு சுகாதார தமிழகம் மற்றும் பெண் கல்வி தொடர்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட ஓவியப்போட்டி (1 முதல் 3ம் வகுப்பு), பேச்சுப்போட்டி (4 மற்றும் 5ம் வகுப்பு), ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைபோட்டிகள் (6 முதல் 8ம் வகுப்பு வரை) ஆகியவற்றில் பங்குபெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த 15 மாணவர்களுக்கு ரூ.29400 மதிப்பிலான காசோலைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 9ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி சூழலில் கற்றது தொடர்பான வினாடி வினா போட்டிகளில் இறுதிச்சுற்றில் மாவட்ட அளவில் வெற்றிப்பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு கலெக்டர் இன்று சான்றிதழ்களையும், புத்தகங்களையும் வழங்கினார். இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, காவல் துணை கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு) கணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதிவாணன் உட்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: