அரூர் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான கரும்பை தனியார் சர்க்கரை ஆலைக்கு ஏற்றி செல்ல முயற்சித்த தனியார் லாரி பறிமுதல்:மாவட்ட வருவாய் அலுவலர் ச. கவிதா நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      சேலம்
3

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்பினை விவசாயிகளுக்கு அதிக பணம் மற்றும் சலுகைகள் அளிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனியார் சர்க்கரை ஆலையினரும், வெல்லம் தயாரிப்பவர்களும், இடைத்தரகர்களும் எடுத்துச் செல்ல முயற்சி செய்து வருகின்றனர். இதனால் ஆலைக்கு வரவேண்டிய லாபத்தையும் அரசுக்கு வரவேண்டிய வருவாயையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு கிடைக்கும் நியாயமான விலையும் கிடைக்காமல் போகின்றது.இது ஆலை கரும்பு ஒப்பந்தப்படியும், கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டப்படியும் (1966) குற்றமாகும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றவுடன் கரும்பு கட்டுப்பாட்டுச் சட்டம் மூலம் லாரி பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆலைக்கு பதிவில்லாத கரும்பினை தனியாருக்கு ஏற்றிச் செல்லும் போதும் ஆலையின் அனுமதி பெற்றுத்தான் எடுத்துச் செல்ல வேண்டுமென மேற்கண்ட சட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. சர்க்கரைத்துறை ஆணையரும் இதனை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த அரூர் வட்டம் லிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் தபெ. துரைராஜ்,என்பவரது கரும்பினை இடைத்தரகர் கோவிந்தன், சங்கிலிமடுவு என்பவர் மூலம் ஹரிஸ்குமார் என்ற தனியார் லாரியில் ஏற்றி பென்னாகரம் வட்டம், வேலம்பட்டியில் உள்ள லாரி உரிமையாளரும் தனியார் வெல்ல ஆலை உரிமையாளருமான ஜோசி (எ) பெருமாள் மகன் வாத்தியார் தனது வெல்ல ஆலைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். தகவலறிந்த சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை கரும்பு அலுவலர் (பொ) தலைமையிலான குழு மற்றும் அரூர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழு லிங்காபுரம் வயலில் கரும்பு ஏற்றிக் கொண்டிருந்த லாரியை பறிமுதல் செய்து ஆலைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இந்நடவடிக்கை தொடர்பாக வாகன உரிமையாளர் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் மீது கடும் காவல்துறை நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்பினை விவசாயிகளை ஏமாற்றி தனியாருக்கு விற்க முயற்சி மேற்கொள்ள வேண்டாம் என இதன்மூலம் தனியார் ஆலைகள் மற்றும் வெல்ல ஆலைகளின் முகவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். இதனை மீறும் இடைத்தரகர்கள், தனியார் ஆலை உரிமையாளர்கள், வெல்ல ஆலை உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்கள் மீது காவல் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. நமது சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2016ஃ17 அரவை பருவம் நல்ல முறையில் இயங்கி வருகிறது. தமிழகத்திலேயே அதிக பட்ச கரும்பு விலையை உடனுக்குடன் கரும்பு அனுப்பி 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் கரும்பு வயல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வெட்டு உத்திரவும் வழங்கப்படுகிறது. எனவே தனியார் இடைதரகர்களை அனுமதிக்காமல் பதிவு கரும்பு முழுவதும் அரசு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் ஃ மேலாண்மை இயக்குநர் ச. கவிதா தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: