ஓசூரில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம்: கோவில்களில் சிறப்பு பூஜைகள்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      கிருஷ்ணகிரி

தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஓசூர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதை சுற்றி உள்ள மத்திகிரி, அக்கொண்டப்பள்ளி, பாகலூர், பேரிகை, சூளகிரி, மற்றும் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். இவர்கள் தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அதை போல இந்த ஆண்டும் யுகாதி பண்டிகையை நேற்று கொண்டாடினார்கள். யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. ஓசூர் மலை மீதுள்ள சந்திர சூடேஸ்வரர் கோவில், பண்டாஞ்சநேயர் கோவில், ராமர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலையிலேயே வீடுகள் முன்பு வண்ண, வண்ண பொடிகளால் கோலமிட்டனர். மேலும், காலை சாமி கும்பிட்டு, புத்தாடை அணிந்து யுகாதி பண்டிகையை கொண்டாடினார்கள். மேலும் கசப்புகளை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக வேப்பம் இலை, வெல்லம் போன்றவை சாப்பிட்டனர். இதே போல ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு வீடுகள் தோறும் ஒப்பட் என்னும் இனிப்பு பலகாரம் செய்யும் வழக்கம் உள்ளது. இதை வீடுகளில் செய்து, சாமிக்கு படைத்து, பக்கத்து வீட்டினருக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து பண்டிகையை கொண்டாடினார்கள். இதன் தொடர்ச்சியாக உறவினர்களுடன் பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்து, பிறை பார்த்து பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டாடினார்கள். யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: