முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மற்றும் 30 தேதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில், ஏப்ரல் 2 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, கலெக்டர் இல.சுப்பிரமணியன் மேலும் தெரிவித்ததாவது:போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயினை தடுப்பதற்காக நாடு தழுவிய அளவில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 1995 ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 22வது வருடமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இந்த ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி மற்றும் ஏப்ரல் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.இப்போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. அருகாமையிலுள்ள மாவட்டங்களின் எல்லை பகுதிகள், குடிசைபகுதிகள், பணி நிமித்தம் இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 2859 மையங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட 3,21,296 குழந்தைகளுக்கு இச்சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்பணிகளில் சுகாதாரத் துறையுடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, வருவாய் துறை, இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று செயல்பட உள்ளன. முகாம் நாளன்று முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 9504 பணியாளர்களும், 352 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 12 சிறப்பு குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகள் அடுத்து வரும் இரண்டு நாட்களில் இப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பார்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே முகாம் நடைபெறும் ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 30-ம் தேதிகளில் பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்கனவே எத்தனைமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும், போலியோ நோய் பாதித்த குழந்தைகள் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்க இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்