முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை நேரு விமானவியல் கல்லூரி 3 நாள் ஏரோபிளஸ், சம்மர் கார்னிவல் துவங்கியது

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் நேரு கல்வி குழுமத்தின் அங்கமான நேரு காலேஜ் ஆ/ப் ஏரோநாட்டிக்ஸ் அண்டு அப்ளைடு சயின்சஸ் மற்றும் நேரு தொழில்நுட்ப கல்லூரிகளின் சார்பில் கோவையில்  நேற்று ஏரோபிளஸ் 2017 என்ற பெயரில் விமான கண்காட்சி, துவங்கியுள்ளது. ஏப்ரல் 7 – ம் தேதி துவங்கி 9 தேதி வரை 3 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகின்றது. இக்கண்காட்சி கோவை பாலக்காடு சாலையில் குனியமுத்தூரில் அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது.

நேற்று துவங்கிய இந்த கண்காட்சியை கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குனர் ஜி. பிரகாஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது - விமானத் துறையில் பாடக் கல்வியைத் தாண்டி செயல் முறை அறிவையும். புகட்டும் விதமாக இந்த கல்லூரி செயல்படுவது பாராட்டுக்குரியது. விமானவியல் துறையில் நேரடியாக தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொள்ள பொது மக்களுக்கும் வாய்ப்பு அளிப்பது அரிதான செயலாகும். விமானவியல் துறையில் ஆண்டு தோறும் உருவாகும் 25 சதவீதம் முன்னேற்றத்தை, புதிய திட்டங்களை, சிறு நகரங்களுக்கும் பரவலாக்கவும், சிறு விமானங்களை முழுமையாக பயன்படுத்தும் விதமாக, விமான நிலையங்களை மேம்படுத்தவும். முயற்சிகள் நடக்கின்றன. கீழ் மத்திய தர மக்களும் பயன்படுத்தும் விதமாக இது அமையும். சேலம், புதுச்சேரி நகரங்கள் சிறு விமானங்கள் மூலம் போக்குவரத்துக்கு வழி வகுக்கும். சிறு விமானங்கள் சேவைகளுக்கு, மாநில அரசுகள் அடிப்படைக் கட்டமைப்புக்கு உதவ வேண்டும். மாணவர்கள் விமானவியல் துறையில் கல்வியோடு நிறுத்தாமல், விமான சேவையில் செயல்முறை நுட்பங்களை நேரடி பயிற்சி மூலம் பெற வேண்டும். ஏர்போர்ட் அதாரிடி மூலம் தொழில்நுட்ப பயிற்சிகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன. டெர்மினல் மேனேஜ்மெண்ட் பயிற்சியையும் இக்கல்லூரி மூலம் பெறலாம். தகவல் தொடர்புத்துறையில் மிக நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு ஆராயப்பட்டு வருகின்றன. டிராபிக் மேலாண்மையில், நேரத்தை குறைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. கோவை விமான நிலைய விரிவாக்கம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என தீவிர முயற்சியில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விழாவில் கத்தார் ஏர்வேஸ், லைசென்ஸ்டு ஏர்கிராப்ட் இன்ஜினியர், எஸ். செபஸ்டியன், கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் நேரு கல்வி குழுமங்களின் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர்.பி.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை டீன் டாக்டர். பி. ஆர். பாலாஜி வரவேற்றார்.

கண்காட்சியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர இந்த கண்காட்சியில் பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 10 – க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களின் பார்வைக்காக அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தின் நடுவே உயர பறந்து கொண்டு இருந்த ஒரு சிறிய ஹெலிக்காப்டர், பார்வையாளர்கள் அனைவரையும் வியக்கவைத்தது. காட்சிக்கு வைக்கப்ட்டுள்ள 3 அடி நீளமான மிக அழகிய வடிவில் இருந்த ஹெலிக்காப்டர் மற்றும் ஒரு கவர்ச்சி காட்சியாக இருந்தது. மேலும் பீனிக்ஸ் டெக்னாலஜிஸ் தெர்மோகாலால் தயாரித்த கிளைடர் ஒவ்வொன்றும் பார்வையாளர்களின் பார்வைக்கும் ரூபாய் 50 க்கு விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. விமான உதிரிபாகங்கள் மற்றும் எண்ணற்ற அரிய விமானங்களின் புகைப்படங்களும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. விமான ஆய்வுக் கூடங்கள், 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விமான நிலையம் மற்றும் விமானம் சம்பந்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிஷ்டசாலிகள் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் ஏறி அமர்ந்து மகிழலாம். குடும்பத்துடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் குழந்தைககளுக்கு விளையாட்டு, வினாடிவினா, பொழுது போக்கு நிகழ்ச்சி மற்றும் புட் கோர்ட் ஆகியவைகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் இந்த கண்காட்சியில் மாணவர்களின் பயிற்சிக்காக சிமுலேட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியை பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்