முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு நிறுவனத்தை எதிர்த்து வடசென்னை மீனவர்கள் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      சென்னை

 

சென்னை அடுத்த திருவொற்றியூர் மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த நிறுவனத்தில் பெட்ரோல், டீசல், ஆயில் தயாரிக்கப்படுகிறது. பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த நிறுவனத்தில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

குழாய் அமைக்கும் பணி

 இதற்காக சென்னை துறைமுகத்தில் இருந்து இராயபுரம் காசிமேடு, திருவொற்றியூர் கடற்கரை வழியாக மணலி சி.பி.சி.எல்., நிறுவத்திற்கு கச்சாஎண்ணெய் கொண்டுவர ராட்சத குழாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. சுமார் 17 கி.மீட்டர் தூரம் பூமிக்கு அடியில் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.256 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

 இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. இதற்கு திருவொற்றியூர், இராயபுரம் பகுதி மீனவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து வடசென்னையில் உள்ள இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர்.எம்.டி.தயாளன் தலைமையில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. முடிவில் கலெக்டர்களுக்கு கோரிக்கை மனுக்கள் தயார் செய்யப்பட்டது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது,

பொதுமக்கள் எதிர்ப்பு

மணலியில் உள்ள சி.பி.சி.எல்., நிறுவனமானது பூமிக்கடியில் எண்ணெய்குழாய்களை பதித்து கச்சா எண்ணெயை சென்னை துறைமுகத்திலிருந்து பணியை தொடங்க உள்ளனர். இப்பணி தொடங்க கூடாது என்றும், இந்தக்குழாய் பதிக்கும் பணி மீனவர்கள் குடியிருப்புக்கு அடியிலும் வர உள்ளதால், இக்குழாயானது பதிக்கக்கூடாது என்றும், கடந்த 2012ம் சென்னை கலெக்டர் தலைமையிலும், திருவள்ளுர் கலெக்டர் தலைமையிலும் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் வடசென்னை வாழ் பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம்.

வாழ்வாதாரம் பாதிக்கும்

மேலும் 2012ம் ஆண்டு முதல் நேரடியாகவும், அரசு கவனத்திற்கு செல்லக்கூடிய பல ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும், பல்வேறு மனுக்கள் மூலமாகவும், சி.பி.சி.எல்., சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளோம். ஆனால் மக்கள் நலனில் அக்கறையில்லாமல், மக்களின் பாதிப்பை உணராமல், மக்களின் நிலத்தடி நீர் ஆதாரத்தை பற்றி கவலைப்படாமல், தீ விபத்து ஏற்பட்டால், மக்கள் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்று கவலைப்படாமல் ஏதோ காரணத்திற்காக ஓட்டுமொத்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வருகிறார்கள். மேலும் இத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும். காரணம், இக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்து மீனவர்கள் வாழக்கூடிய பகுதிகளில் நிலத்தடி நீரை மாசடைய செய்யும்.

மீன் இனம் அழியும் அபாயம்

மேலும் இந்த எண்ணெய் கசிந்து கடல் நீருடன் கலந்து கடலில் உள்ள ஒட்டுமொத்த மீன்கள் இனத்தையும், கடல்வாழ் உயிரினங்களையும் அழித்துவிடும். மேலும் இக்குழாயானது மீனவர்கள் குடியிருக்கக்கூடிய வீடுகளுக்கு அடியில் பதிக்க இருப்பதால் மீனவர்கள் வருங்காலத்தில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. மேலும் இக்குழாயினுள் எண்ணெய் கசிவு ஏற்பட்டு தீ விபத்துக்கள் ஏற்பட்டால் ஒட்டுமொத்த மீனவ கிராமங்களும் அழியும் சூழ்நிலை ஏற்படும். மேலும் வடசென்னை முழுவதும் அழிவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

பாதிப்பு ஏற்படும்

மேலும் தீ விபத்து ஏற்பட்டால் குடிசைகளில் வாழும் லட்சக்கணக்கான மீனவர்கள் இறப்பை சந்திக்க நேரிடும். எனவே தயவு செய்து மீனவர்கள் மற்றும் வடசென்னை வாழ் பொதுமக்களின் எதிர்பை மீறி இத்திட்டத்தை நிறைவேற்ற நினைக்கும் சி.பி.சி.எல்., நிறுவனமும், இந்த வேலையை எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர்களும் இப்பணியினால் பாதிப்புக்குள்ளாக இருக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இப்பணியை தொடங்க கூடாது என்றும் மேலும் மீண்டும் ஒருமுறை கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி அக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள் கூறுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்