முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 54, 495 அங்கன்வாடி முதன்மை மையங்களும், 4,995 குறு மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்: அமைச்சர் டாக்டர் வி. சரோஜா பேட்டி

திங்கட்கிழமை, 1 மே 2017      நாமக்கல்

 தமிழகத்தில் 54, 495 அங்கன்வாடி முதன்மை மையங்களும், 4,995 குறு மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் டாக்டர் வி.சரோஜா தெரிவித்தார்.

 அமைச்சர் பேட்டி

சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வி. சரோஜா நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மறைந்த முதல்வர் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நல்லாட்சியில் முருங்கப்பட்டி ஊராட்சி, பிள்ளப்பநாயக்கனூர் கிராமத்தில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் உரையாடி இந்த கிராமத்திற்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்போகிறோம் என்பது குறித்து கிராமசபைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. இந்த ஊராட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டும் இன்னும் சில திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முருங்கப்பட்டி ஊராட்சியில் மட்டும் 2016 முதல் 2017- 18- வரை சுமார் ரூ.43.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட இருக்கின்றது. இந்த கிராமத்தில் 949 மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரு அங்கன்வாடி மையம், ஒரு சத்துணவு மையம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இக்கிராமத்தில் தனிநபர் இல்லக்கழிப்பிடம் அனைவரும் கட்டியிருப்பது பாராட்டுக்குரியது. இக்கிராம மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துபவர்களாகவும், நீர் பற்றாக்குறை பற்றிய அதிகம் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு மேல்நிலைத்தொட்டியும், ஒரு தரைத்தளத்தொட்டியும், கைப்பம்பும் இருந்தாலும் கூட மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சுத்தம் சுகாதாரமாகவும் இக்கிராம மக்கள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நிலையில் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் 6 மாதம் முதல் 5 வயது வரை 54, 495 அங்கன்வாடி முதன்மை மையங்களும், 4,995 குறு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 25 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். அந்த அங்கன் வாடி மையத்தில் அந்தந்த கிராமங்களிலுள்ள கருவுற்ற தாய்மார்களும் பதிவு செய்ய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அந்த கிராமத்திலுள்ள வளர் இளம் பெண்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அங்கன்வாடி மையம் என்பது அனைத்து திட்டங்களுக்கும் ஒரு மையமான அங்கமாக திகழ்ந்து வருகின்றது.

தாலிக்கு தங்கம்; வழங்கும் திட்டத்தில் 2011 முதல் இதுவரை 5 வகையான திருமண நிதியுதவி திட்டங்களின் மூலம் 8,79,232 பயனாளிகளுக்கு ரூ.2960.70 கோடி திருமண நிதியுதவியும், 3505.50 கிலோ தங்கமும் என மொத்தம் 3951.23 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 16.02.2017 அன்று 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளார்கள். முதலாவதாக பணியிடங்களுக்கு செல்லும் மகளிருக்கு 50 சதவிகித மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் திட்டத்திற்கு முதல் கையொப்பம் இட்டு ஆண்டிற்கு ரூ.200.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்கள். கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி ரூ.12,0000 யிலிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டுருந்தார்கள். தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபானக்கடைகளை மூடுவதற்கான ஆணையிலும் கையொப்பமிட்டுள்ளார்கள்.நீர் நிலைகளை பராமரிப்பதற்கு குடி பராமத்துப்பணிகளை மேற்கொள்ள ஆணையிட்டு முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதியினையும் ஒதுக்கீடு செய்ததோடு அதன் பின்னர் ரூ.300 கோடி நிதியினையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்கள். இந்நிதியின் மூலம் நீர் நிலைகள் பலப்படுத்தப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட்டு அதனைச்சுற்றிலுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பெருகுவதோடு விவசாயிகளே நீர் நிலைகளை பராமரித்து பாதுகாத்து அதன்மூலம் விவசாயம் செழிப்பாக மேற்கொண்டு அவர்களின் வாழ்க்கைத்தரத்தினையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு இக்குடிமராமத்துப்பணி திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள். இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இத்திட்டம் விளங்கி வருகின்றது. வறட்சிக்கே நிவாரணம் கொடுத்த முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் துறைக்கு 2017-18 ஆம் நிதியாண்டிற்கு ரூ.476 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 1992 –ல் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக துறையை ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கொன தனி கொள்கையும் வகுத்து தமிழகத்தில் இன்று 11 இலட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளும் பயனடைகின்ற வகையிலும் ஒவ்வொரு திட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுகின்றனர். இவ்வாறு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்