முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் அனல் காற்றிலிருந்து காத்துக்கொள்ள போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: கலெக்டர் வா.சம்பத், உத்தரவு

வியாழக்கிழமை, 4 மே 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்டத்தில் கோடைகாலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர்.சந்திரமோகன், தலைமையில் நேற்று (04.05.2017) சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து கலெக்டர் வா.சம்பத், தெரிவித்ததாவது

நடவடிக்கைகள்

தமிழக அரசால் கோடை காலங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்காக அள்ளுவது போன்றவை குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை காணொலி காட்சி மூலமாக முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கலெக்டர் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதன் அடிப்படையில் வண்டல் மண் கொண்டுள்ள நீர் நிலைகளின் விவரம், வண்டல் மண் எடுப்பதற்காக கண்டறியப்பட்டுள்ள நீர் தேக்கங்களின் விபரம், மதிப்பீடு செய்யப்பட்டுள்ள வண்டல் மண்ணின் அளவு, இதுவரை வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நீர் தேக்கங்களின் விபரம், நாளது தேதி வரையில் எடுக்கப்பட்டுள்ள வண்டல் மண்ணின் அளவு, நாளது தேதி வரையில் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து காணொலி காட்சி மூலமாக ஆய்வு செய்யப்பட்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகளுக்கு கோடைகாலத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் அதிகமாக கிடைக்கும் இடங்களிலிருந்து தண்ணீர் தேவைப்படும் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு சென்று வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான போதிய அளவு நிதியினை தொடர்புடைய துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனல் காற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தண்ணீர் தேவை குறித்து அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து அவ்வப்போது கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம், நேரடி கள ஆய்வு மேற்கொள்ளவும் உத்திரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.இந்த காணொலி காட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்