புழல் ஜெயிலில் கைதி தற்கொலை

புதன்கிழமை, 10 மே 2017      சென்னை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் நிவேதா (வயது 45). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். அப்போது கோவை தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த இளையராஜா (வயது 29) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

 விசாரணை

இளையராஜாவிற்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தை உள்ளது. ஆசிரியை நிவேதாவும், இளையராஜாவும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பேஸ்புக் மூலம் கொளத்தூரைச் சேர்ந்த கணபதி (வயது 33) என்பவருடன் நட்பு ஏற்பட்டு இவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த இளையராஜா நிவேதாவை கண்டித்தார். இந்நிலையில் இளையராஜாவும், நிவேதாவும் ஓட்டலுக்கு வந்து அங்கு தங்கியிருந்தனர். இளையராஜா கண்டிப்பை மீறி கணபதியுடன் நிவேதா பேசிக்கொண்டிருந்ததை பார்த்து விட்டு இளையராஜா கணபதியுடன் சண்டையில் ஈடுபட்டார். இதையடுத்து நிவேதா கணபதியுடன் மோட்டார்சைக்கிளில் சென்றார்.

இவர்களை பின்தொடர்ந்து காரில் சென்ற இளையராஜா சென்னை அண்ணாநகர் அருகே தான் ஓட்டிச்சென்ற காரை மோட்டார்சைக்கிள் மீது மோதினார். இதில் நிவேதாவும், கணபதியும் பலத்த காயமடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் நிவேதா செத்தார். கணபதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அண்ணாநகர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். புழல் ஜெயில் ஏ" பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த இளையராஜா நேற்று பகல் 12 மணிக்கு மதிய உணவிற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இளையராஜா திடீரென அறைக்குள் சென்று பாத்ரூம் ஜன்னல் வழியாக தனது லுங்கியை கயிறாக திரித்து தூக்கில் தொங்கினார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளையராஜாவை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பபட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணத்தை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: