பத்தாம்வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தது

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      ராமநாதபுரம்
rmd collecter

 ராமநாதபுரம்,-தமிழகத்தில் நேற்று வெளியான பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ந் தேதி தொடங்கி  30-ந் தேதி வரை  நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,814 மாணவர்கள், 9,165 மாணவிகள் என மொத்தம் 17,979 மாணவ, மாணவியர்கள்  இந்த தேர்வு எழுதினார்கள்.  இந்த தேர்வு முடிவுகளின்படி, தேர்வு எழுதியவர்களில் 8,590 மாணவர்கள், 9,058 மாணவியர்கள் என மொத்தம் 17,648 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 98.16சதவீதம் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.  கடந்த ஆண்டு 97.10 சதவீதம் பெற்று மாநில அளவில் நான்காம் இடத்தில் இருந்தது. இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் மாணவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.46சதவீதம் ஆகவும் மாணவிகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 98.83சதவீதம் ஆகவும் உள்ளது. மேலும் இந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதமானது கடந்த ஆண்டை விட 1.06சதவீதம் கூடுதலாகும்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் தேர்வு எழுதிய 248 பள்ளிகளில் 157 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.   அவற்றில்  83 அரசு பள்ளிகள், 29 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்  45 மெட்ரிக் பள்ளிகள் ஆகும். குறிப்பாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 26 பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளைப் பொறுத்த வரையில் சென்ற ஆண்டை விட இவ்வாண்டில் 18 அரசு பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில் 98.16சதவீதம் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றதற்காக கலெக்டர் நடராஜன் முதன்மை கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணுவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.  மேலும் இத்தகைய முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைத்த ஆசிரிய, ஆசிரியைகளையும், மாணவ, மாணவிகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசும்போது திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது.  தேர்வு வைக்கப்பட்ட பாடங்களுக்கு அன்றைய தினமே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி அவற்றில் பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட்டது.  ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமையும் தலைமை ஆசிரியரால் இப்பணி மீளாய்வு செய்யப்பட்டது.  ஒவ்வொரு பாடத்திற்கும் மாதத்திற்கு நான்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தப்பட்டது.


பாட ஆசிரியர்களால் ஒரு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு தேர்வுகள் வைக்கப்பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ச்சியில் மாணவர்கள் முன்னேற்றம் அடைந்தனர். மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வழங்கப்பட்ட வினா வங்கி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு, அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.  இத்தகைய நடவடிக்கைகளின் பயனால் தான் மாநிலத்தில்; மூன்றாமிடம் பிடிக்க முடிந்தது. இவ்வாறு பேசினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராமநாதபுரம் கே.ராமர்,  பரமக்குடி டி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: