நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் டி.பி.ராஜேஷ், வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      கடலூர்
cud collector

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,   70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்  முன்னிலையில் வழங்கினார்.

 நலத்திட்ட உதவிகள்

கலெக்டர் , சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000-ம் பெறுவதற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.20000- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், வருவாய்த்துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.2,87,520- மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.89,400- மதிப்பிலான இடுபொருட்களையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக 25 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.56,416- மதிப்பிலான இடுபொருட்களையும் என ஆகமொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ.4,73,336- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்மனுநீதி நாள் முகாமில் கலெக்டர்  கூறியதாவது,           தமிழக அரசு இந்த வறட்சியான காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக 76,320 விவசாயிகளுக்கு ரூ.55 கோடி வறட்சி நிவாரணமாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கால்நடைகளுக்காக நமது மாவட்டத்தில் 9 உலர் தீவன கிடங்குகள் மூலம் சலுகை விலையில் ரூ.2- க்கு  வைக்கோல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 6 உலர் தீவன கிடங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளே மாட்டு தீவனங்களை தயாரிக்க பயிற்சியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 220 மெட்ரிக் டன் தீவனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதம்பரம் பகுதியில் கடல்நீர் உள்ளே புகுந்து குடிநீர் உப்பாவதை தடுப்பதற்காக தடுப்பணை அமைத்தல் போன்ற நீண்டகால திட்டங்களுக்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 130 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் கடலூர் மாவட்டத்தில் ரூ.140.01 கோடி மதிப்பீட்டில் 5 வெள்ளத்தடுப்பு பணிகளை துவக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள 545 ஏரிகள் மற்றும் குளங்களில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் வீடு கட்டுவோர்கள் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் எடுக்க அனுமதித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. பேச்சு

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன்  இந்த மனுநீதிநாள் முகாமில் தெரிவித்ததாவது,கலெக்டர்  கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களை தேர்தெடுத்து இந்த மனுநீதிநாள் முகாமை நடத்துவதை நினைத்து பெருமகிழ்ச்சியடைகிறேன். கலெக்டர்  பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு வளர்ச்சிப்பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கிராம மக்கள், விவசாயிகளுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் சிறப்பாக செயல்பட்டு  வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பின் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள இடங்களை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். கலெக்டர்  உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். சிதம்பரம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணையும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையும் கட்ட கோரிக்கை வைத்துள்ளேன். கலெக்டர்  அரசின் பரிசீலினைக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.

கலெக்டருக்கு நன்றி

நஞ்சை மகத்துவாழ்க்கை கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்க கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏழை எளிய மக்களுக்காக  அம்மா  மாதந்தோறும் வழங்கும் முதியோர் உதவித்தொகையை ரூ.1000- மாக உயர்த்தி வழங்கினார்கள். இதனால் லட்சக்கணக்கான முதியோர்கள் பயனடைந்து வருகிறார்கள். கலெக்டர்  மிகவும் உத்வேகத்துடன் பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகான முனைப்புடன் செயல்பட்டு வருவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்இந்த மனுநீதிநாள் முகாமினை முன்னிட்டு ஏற்கனவே 148 மனுக்கள் பெறப்பட்டு அதில் 43 தகுதியான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 96 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இன்று 79 மனுக்கள் வரப்பெற்றது. அவைகளின்மீது விதிகளின்படி பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்து.இந்த மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ் சிறப்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர்  விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார். சிதம்பரம் வருவாய் வட்டாட்சியர்  மகேஷ்  இந்த மனுநீதிநாள் முகாம் சிறப்புற நடைபெறுவதற்கான பணிகளை மேற்கொண்டார்.

பலர் பங்கேற்பு

இந்த மனுநீதிநாள் முகாமில் இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) கனகசபை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கிருபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கு.மதிவாணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, துணை மேலாளர் (தாட்கோ), சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை உதவி இயக்குநர், அரசுத்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வீகம், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: