முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேன்கனிக்கோட்டை அருகே தாயிடம் இருந்து பிரிந்த குட்டியானை கிராமத்தில் தஞ்சம்: வனத்துறையினர் மீட்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 28 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

தேன்கனிக்கோட்டை அருகே தாயிடம் இருந்து பிரிந்த குட்டியானை கிராமத்தில் தஞ்சம் அடைந்தது. அந்த யானையை வனத்துறையினர் மீட்டனர்.ருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது அய்யூர் வனப்பகுதி. இங்கு ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியையட்டி உள்ளது தடிக்கல் மலைக்கிராமம். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வயதான பெண் குட்டியானை ஒன்று அங்கு சுற்றி திரிந்தது. இந்த யானை அதன் தாய் யானையுடன் இருப்பதாக அந்த கிராம மக்கள் எண்ணி, யானையின் அருகில் செல்லாமல் தவிர்த்து வந்தனர்.

குட்டியானை

 

இந்த நிலையில் அந்த குட்டி யானை தடிக்கல் கிராமத்திற்குள் நேற்று நுழைந்தது. குட்டி யானை அதன் தாயுடன் தான் கிராமத்திற்குள் நுழைந்ததாக கருதிய கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் குட்டி யானையோ தனியாக கிராமத்திற்கு சோர்வாக நடந்து வந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அந்த யானைக்கு பழங்கள், தண்ணீர் ஆகியவை கொடுத்தனர்.

பொதுமக்கள் கொடுத்த பழங்களை குட்டியானை விரும்பி சாப்பிட்டது. பின்னர் அந்த கிராம மக்களுடன் அந்த குட்டி யானை நன்றாக சேர்ந்து கொண்டது. இது குறித்து கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம், வனவர்கள் கதிரவன், பழனியப்பன், வன காவலர் வடிவேல், வேட்டை தடுப்பு பிரிவு கோவிந்தராஜ், மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் குட்டி யானையை மீட்டனர். அப்போது யானையின் பின்புற கால்களில் புண் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குட்டியானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு காப்புகாட்டில் விட்டனர். தற்போது அந்த குட்டியானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். மீட்கப்பட்ட குட்டி யானையை அதன் தாயுடன் இணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து