முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அகற்றுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் ஆகியவற்றினை அகற்றுவதை முறைப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

 அனுமதி பெறாமல் வைத்தால் நடவடிக்கை

பொது இடங்களில் அரசியல் கட்சிகள், திருமண வைபோகங்கள் மற்றும் இதர அனைத்து வகை நிகழ்ச்சிகளுக்கான கட்அவுட் பேனர்கள் வைப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட துறையிடம் ஆட்சேபனையின்மை சான்று பெற்று பின்னர் சம்மந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.  தற்போது அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்துவகை கட்அவுட் பேனர்கள் உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

விளம்பரம் செய்பவர்கள் விளம்பர அமைப்புகளை நிறுவுவதற்கு 15 தினங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட கோட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய இணைப்புகளுடன் கூடிய விண்ணப்பப் படிவம் பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர் மூலம் விளம்பர பேனர்கள் வைக்கப்படும் இடத்தினை ஆய்வு செய்து அதன் அறிக்கை பெறப்பட்டு கோட்டாட்சியரால் பரிசீலனை செய்யப்பட்டு உரிய விதிமுறைகளை நிறைவு செய்யும் பட்சத்தில் அனுமதி அளிக்கப்படும்.  ஆட்சேபணைக்குரிய தகவல்களுடன் கூடிய விளம்பரங்களை விளம்பரம் செய்தவருக்கு அறிவித்தோ அல்லது அறிவிக்காமலோ அகற்றப்படும்.

விபரங்கள் குறிப்பிட வேண்டும்

விளம்பரத்தின் கீழ்புறம் அச்சகத்தின் பெயருடன், அனுமதி எண், நாள், அனுமதிக்காலம் மற்றும் எத்தனை விளம்பர அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.  அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் குறித்து வரப்படுகின்ற புகார்கள் மீது காவல் துறையின் மூலம் ‘முதல் தகவல் அறிக்கை’ தாமதமின்றி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள், அ.இ.அ.தி.மு.க. 34 வார்டு நகரமன்ற உறுப்பினர் ஆர்.அபிராமன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ம.ஜெயச்சந்திரன், பா.ஜ.க. மாவட்ட பொது செயலாளர் வெ.சுகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அறிவழகன், விவசாயிகள் சங்கம் ஆர்.கலியமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்க தலைவர் அம்மன் கோ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து