முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் கோடை சீசன் ஓய்ந்தது_ மழை பெய்யத் துவங்கியது விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழக்கிழமை, 1 ஜூன் 2017      நீலகிரி

ஊட்டியில் கோடை சீசன் ஓய்ந்து மழை பெய்யத்துவங்கியுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை விழா நிறைவு

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி காட்சி, ரோஜா காட்சி பழக்காட்சி, மலர்காட்சி, வாசனை திரவிய காட்சிகளும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாவினையொட்டி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில்  ஒரு மாத காலம் கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

கலைநிகழ்ச்சிகள்

நீலகிரி கோடைவிழாவானது கடந்த மாதம் 6_ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி, அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி, இறுதி விழாவாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சிகள் நடத்தப்பட்டன. கோடைவிழாவின் நிறைவு நாள் விழா கடந்த 31_ந் தேதி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த நிலையில் கோடை விழா நிகழ்ச்சிகள் ஓய்ந்திருந்த நிலையில் நேற்று காலை முதல் ஊட்டி நகரில் விட்டு, விட்டு மழை பெய்ய துவங்கியுள்ளது.  ஊட்டி நடைபெற்றுவந்த கோடை விழா நிகழ்ச்சிகள் ஓய்ந்த நிலையில் நேற்று காலையில் மழை பெய்யத்துவங்கியது தென்பருவமழையின் துவக்கமாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்ளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் ஊட்டி நகரில் நிலவிவந்த குடிநீர் பற்றாக்குறை தீரும். ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பெய்த மழையின் காரணமாக விவசாயிகளும், பொதுமக்களும் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து