மத்திய அரசு உத்தரவு எதிரொலி களை இழந்தது ஈரோடு மாட்டுச் சந்தை

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      ஈரோடு

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட உத்தரவையடுத்து ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துவிட்டது.ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன்படி, புதன்கிழமை வளர்ப்பு கன்றுக் குட்டிகளும், மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வயது முதிர்ந்த, பால் கறக்காத மாடுகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.ஆனால், இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்ததால் மிகவும் குறைவான மாடுகளே புதன்கிழமை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த மாடுகளை கேரள மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

கறவை மாடுகளுக்கான சந்தை வியாழக்கிழமை கூடியது. இந்த சந்தையில் சினை மாடுகளும், கன்றுக் குட்டி ஈன்று சில நாள்களேயான மாடுகளும் விற்பனை செய்யப்படும். ஆனால், வழக்கத்தைவிட மிகவும் குறைந்த அளவிலேயே மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதால் சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மாட்டுச் சந்தை வியாழக்கிழமை களையிழந்து இருந்தது.இதுகுறித்து, மாட்டுச் சந்தை மேலாளர் முருகன் கூறியதாவதுகருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வாரந்தோறும் சுமார் 1,200 கறவை மாடுகள் விற்பனை செய்யப்படும்

பறிமுதல்  பயத்தில்

ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா, கோவா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள்.இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு பயந்து விவசாயிகள் கறவை மாடுகளையும் விற்கத் தயங்குகின்றனர். அடிமாடுகளை மட்டுமே விற்கக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், விவசாயிகள் கறவை மாடுகளை விற்பனைக்கு கொண்டு சென்றால் வழியில் பறிமுதல் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் சந்தைக்கு வரவில்லை.கடந்த 3 நாள்களாக சந்தை நடைபெறுமா என்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது, கறவை மாடுகளை விற்கத் தடையில்லை என்று தெளிவாக எடுத்துக் கூறியும் விவசாயிகள் பலர் வரவில்லை.

இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு 250 பசு மாடுகளும், 200 எருமை மாடுகளும் என மொத்தம் 450 மாடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ஆனால், மாடுகளை வாங்குவதற்காக வழக்கம்போல் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், அனைத்து மாடுகளும் விற்பனையானது.   மேலும், வரத்து குறைந்ததால் ஒரு மாட்டுக்கு ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரம் வரை விலை உயர்ந்து விற்பனையானது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து