முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டுகலெக்டர் சிவஞானம் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் -விருதுநகர் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெருமளவு மரக்கன்று நடுதல் திட்டத்தின் கீழ்;  மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகம் எதிரே உள்;ள கூரைக்குண்டு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்று நட்டு, மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும். மரம் வளர்ப்பதினால் தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன்படுத்துவதனாலும் ஏற்படும் காற்று மாசினை தூய்மையாக்குகிறது. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப்பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே, அவ்வாறு பெய்கின்ற மழைநீர் நிலத்தடி நீர்மட்டம் உயர உதவுகிறது.
மேலும், வறட்சியையும் தாங்கி விரைவாக மரக்கன்றுகள் வளர வேண்டும் என்ற நோக்கி இந்த புதிய நீர்பாசன வழிமுறையினை பயன்படுத்தி நடப்படுகிறது. இப்புதிய நீர் பாசன வழிமுறையில் 2 அடி ஆழமும், 1 அடி அகலமும் உள்ள குழிகள் வெட்டப்பட்டு அதன் இரு ஓரங்களில் பி.வி.சி. பைப்கள் பொறுத்தப்படுகிறது. அந்த பி.வி.சி. பைப்பின் உள்ளே ஆற்று மணல் இடப்படுகிறது. பின்னர் குழியில் கரம்பை, செம்மண், மணல், மண்புழு உரம் ஆகிய கொண்ட கலவை மணல் இடப்பட்டு மரக்கன்றுகள் நடப்படுகிறது. பின்னர் பி.வி.சி. பைப்கள் அகற்றப்படுகிறது. இம்முறையில் குழியில் இரு புறங்களிலும் மணல் உள்ளதால் குழியில் மரக்கன்றுக்கு ஊற்றப்படும் நீர் மணல் வழியே மரக்கன்றின் வேர் வரை செல்கிறது. மேலும், மணல் நீரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டதால் எப்போதும் மரக்கன்றுக்கு தேவையான நீர் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் மரக்கன்று விரைவாகவும், வறட்சியையும் தாங்கி வளர்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு  பெருமளவு மரக்கன்று நடுதல் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்திலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும்  புதிய நீர் பாசன வழிமுறையை பயன்படுத்தி மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று வேம்பு, புளி,புங்கை போன்ற மரக்கன்றுகளும், பல்வேறு வகையான பூச்செடிகளும் என மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகம் எதிரே உள்;ள கூரைக்குண்டு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2007 மரக்கன்றுகளும், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்திலும் 137 மரக்கன்றுகளும் மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் 9 ஊராட்சிகளிலும் 130 மரக்கன்றுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் காரிசேரி ஊராட்சியில் 58 மரக்கன்றுகளும், திருவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மல்லி மற்றும் பிள்ளையார்நத்தம் ஊராட்சிகளில் 33 மரக்கன்றுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மகாராஜபுரம் ஊராட்சியில் 100 மரக்கன்றுகளும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் 34 மரக்கன்றுகளும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பந்தல்குடி மற்றும் கட்டங்குடி ஊராட்சிகளில் 60 மரக்கன்றுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தண்டியனேந்தல் ஊராட்சியில் 42 மரக்கன்றுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் 100 மரக்கன்றுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சின்னக்காமன்பட்டி ஊராட்சியில் 25 மரக்கன்றுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளில் 522 மரக்கன்றுகளும் என மொத்தம் 3248 மரக்கன்றுகளும், பூச்செடிகளும் நடப்பட்டுள்ளது. 
விருதுநகர் மாவட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் அனைத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மூலமாக பராமரிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சி செயலர்,மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து