முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் -கலெக்டர் சிவஞானம். வழங்கினார்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      விருதுநகர்
Image Unavailable

- விருதுநகர்- விருதுநகர் மாவட்டக்கலை மன்றம் வாயிலாக 2015-16ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு கலை இளமணி, கலைவளர்மணி, கலைச்சுடர்மணி, கலைநன்மணி, கலை முதுமணி ஆகிய விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம்.  வழங்கி பின்னர் தெரிவித்ததாவது :-
 தமிழ்நாட்டின் கலைப்பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஆண்டுதோறும் மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 அதன்படி, 2015-16ம் ஆண்டுக்கு விருதுகள் வழங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், திருநெல்வேலி மண்டலக் கலைப்பண்பாட்டு மைய உதவி இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சுற்றுலா அலுவலர், கலைமுதுமணி ஓவியக் கலைஞர், கலைமுதுமணி வீணைக்கலைஞர், பரதநாட்டியக் கலைஞர், நாட்டுப்புறப்பாடகர், ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களாக ஓவிய கலைப்பிரிவில் செல்வி.பா.லோகப்பிரியா கலை இளமணி விருதுக்கும், குரலிசை கலைப்பிரிவில் செல்வி.ச.ஸ்ரத்தா கலை வளர்மணி விருதுக்கும், நாதசுரம் கலைப்பிரிவில் திரு.க.சின்னப்பர் கலைச்சுடர்மணி விருதுக்கும், கிராமிய பாடகர் கலைப்பிரிவில் திருமதி.எஸ்.மிக்கேலம்மாள் கலைநன்மணி விருதுக்கும், ஆர்மோனியம் கலைப்பிரிவில் திரு.எம்.எல்.ஆறுமுகதாஸ் கலைமுதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு, கலை இளமணி, வளர்மணி, சுடர்மணி, நன்மணி, முதுமணி ஆகிய விருதுகள் முறையே   ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.7 ஆயிரத்து 500, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுகளும், பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 மேலும், 2016-17ம் ஆண்டுக்கு மாவட்டத்தில் மாவட்டக் கலை மன்றம் மூலம், இயல்,இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
 எனவே, மாவட்டத்தில் இயல்,இசை, நாடகம் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. கலை விருதுகள் முறையே, 18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்கள் கலை இளமணி விருதுக்கும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்கள் கலை வளர்மணி விருதுக்கும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்கள் கலைச்சுடர்மணி விருதுக்கும், 51 முதல் 60 வயதிற்குட்பட்ட கலைஞர்கள் கலை நன்மணி விருதுக்கும், 61 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள் கலை முதுமணி விருதுக்கும் விண்ணப்பிக்கலாம். வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படும் ஐந்து சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.
 விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன், தொலைப்பேசி எண் குறிப்பிட்டு உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870ஃ21, அரசு அலுவலர் “ஆ” குடியிருப்பு, திருநெல்வேலி - 7, தொலைபேசி எண். 04562 - 2553890 என்ற முகவரிக்கு 10.07.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 மேலும், விருதுநகர் மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பம் செய்ய கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து