முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரை ஆட்டோவில் கடத்தி நகை, பணம் கொள்ளை

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      சேலம்

 

கோவையில் சினிமா படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு திரும்புவதற்காக சேலம் புதிய பேருந்து நிலையம் வந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல், நகைச்சுவை நடிகரை கடத்தி, கடுமையாக தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக அளித்த புகாரினை தொடர்ந்து சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை....

நகை, பணம் கொள்ளை

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைசுவை வேடங்களில் நடித்தவர் கொட்டாச்சி. சென்னை போரூர் பகுதியில் தனது குடும்பத்தினரோடு வசித்து வரும் இவர், கோவை அருகே நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு, தனது பிறந்த நாளை குடும்பத்தோடு கொண்டாடுவதற்காக பேருந்தில் சென்னைக்கு புறப்பட்டார். இரவு சுமார் ஒரு மணியளவில், சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த அவர், சென்னைக்கு செல்லும் தனியார் சொகுசு பேருந்துகள் நிற்கும் இடத்தை கேட்டு ஆட்டோ ஓட்டுனர் ஒருவரிடம் விசாரித்து உள்ளார். இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனரும், அவரது நண்பர் இருவரும், தனியார் சொகுசு பேருந்து நிற்கும் இடத்தை காண்பிப்பதாக கூறி, அவரை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நீண்ட தூரம் பயணிப்பதை அறிந்து சந்தேகம் அடைந்த நடிகர் கொட்டாச்சி, ஆட்டோ ஓட்டுனரிடம் இது குறித்து கேட்கவே, ஆட்டோவில் பயணம் செய்த மற்ற இருவரும், கண் இமைக்கும் நேரத்தில், கொட்டாச்சியிடம் இருந்த செல்போனை பிடுன்கியதுடன், அவர் அணிந்து இருந்த இரண்டு சவரன் தங்க சங்கலியையும், அவரிடம் இருந்த பணத்தையும் அடித்து பறித்து கொண்டு, அவரை சேலம் குரங்கு சாவடி என்ற பகுதியில் விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து செய்வதறியாது நின்ற நடிகர் அந்த வழியாக சென்ற சிலரிடம் உதவி கேட்டு, சேலத்தில் உள்ள சக நடிகரான பெஞ்சமினுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர், இது குறித்து பள்ளபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடம் தங்கள் எல்லைக்கு வராது என்று சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மீண்டும் அவரை பள்ளபட்டி காவல்நிலையத்திற்கே திருப்பி விட, புகார் கொடுக்க முடியாமல் நகைசுவை நடிகர் அலைகழிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று மதியம் ஒரு மணியளவில், நடிகரின் புகாரை சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் பெற்று கொண்டு, நடிகரை ஆட்டோவில் கடத்தி, பணம், நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் தெரிவிகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து