கும்பாவுருட்டி அருவி தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      தூத்துக்குடி

கேரள மாநிலம் அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவியில் குளிக்கச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் தடாகத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

 சுற்றுலா பயணிகள் வருகை

குற்றாலத்தில் சீசன் துவங்கி களை கட்டி வருகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் கேரள மாநிலம் அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவி, மணலாறு அருவி, ஆரியங்காவு பாலருவி ஆகியவற்றிற்கும் சென்று குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்திற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இருந்தது. இதனால் பலர் கேரள மாநிலத்தில் உள்ள அருவிகளுக்கும் சென்று குளித்தனர்.


தண்ணீரில் மூழ்கி

இதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த 16 பேர் ஒரு வாகனத்தில் குற்றாலம் வந்தனர். அவர்கள் கேரள மாநிலம் அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவிக்கு குளிக்கச் சென்றனர். கும்பாவுருட்டி அருவிக்கு செல்லும் பாதை மலைப்பாதையில் செல்கிறது. அருவிக்கு அருகே அனைவரும் சென்று குளிக்க முயன்றனர். மழை பெய்து கொண்டிருந்ததால் இரண்டு பேர் பாறையில் வழுக்கி அருவியின் தடாகத்தில் விழுந்தனர். சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இறந்தவர்கள் தூத்துக்குடி காமராஜர்புரம் அழகுமுத்துநகரைச் சேர்ந்த பழனி மகன் ராமச்சந்திரன் (வயது 31), தூத்துக்குடி முல்லைக்காடு கீழத் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் இசக்கிமுத்து (25) என தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கேரள வனத்துறையினர் விரைந்து சென்று தடாகத்தில் மூழ்கி இறந்த இரண்டு பேரின் உடல்களை மீட்டு புனலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தை அடுத்து கும்பாவுருட்டி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பாவுருட்டி அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்க கேரள வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து