முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.210 கோடியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள்

வியாழக்கிழமை, 6 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. செய்தியாளர்கள் பயணத்தில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பொதுப்பணித்துறையின் சாதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- மக்கள் வாழ்வில் வளம்பெற வேண்டுமென்றால், மாநிலம் செழிக்க வேண்டுமென்றால் மனித வள வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்ற அடிப்படை கொள்கையினை பின்பற்றி எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக்கூடிய வகையில் அனைத்துத் துறைகளின் சார்பில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவின் மூலமாக தமிழக அரசு, குறிப்பாக மாணவ மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கூடங்களில் புதிய கட்டடங்கள், பொது மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் அரசு அலுவலகங்களுக்கு புதுமைத் திட்டங்களை செயல்படுத்திட புதிய கட்டடங்கள், மழை வெள்ளக் காலங்கள் மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க கடலோர பேரிடர் குறைப்பு திட்டத்தின் கீழ் புயல் பாதுகாப்பு மையங்கள், மனித உயிரினம் மட்டுமின்றி கால்நடைகளுக்கும் மருத்துவமனைக் கட்டடங்கள் என காலங்கள் போற்றும் கட்டுமானப் பணிகளை உருவாக்கி வருகிறது. இந்த கட்டடங்கள் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்பதற்கும், தமிழகத்தின் கட்டடக் கலைக்கும் சான்றாக விளங்குகிறது.
 அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலமாக கடந்த 5 ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு ரூ.13 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் அதிக காற்றோட்ட வசதியுடன் கூடிய வகுப்பறை கட்டடப் பணிகள் மற்றும் நவீன கழிப்பறை கட்டடங்களும், ரூ.4 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில்; நவீன வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய மாணவ மாணவியருக்கான விடுதி கட்டடங்களும், ரூ.11 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக கட்டடம், ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் ராமேஸ்வரத்தில் அரசு விருந்தினர் மாளிகையும், ரூ.6 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் அதி நவீன உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பணியாளர்கள் சிரமமின்றி பணி மேற்கொள்ளும் வகையில் பொது மக்கள் வந்து செல்லும் பல்வேறு அரசு கட்டடங்களும், ரூ.6 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட கால்நடை மருந்தக கட்டிடங்களும், ரூ.7 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் திருவாடானை மற்றும் முதுகுளத்தூரில் நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் நீதிபதி குடியிருப்பு கட்டடங்கள் என ரூ.51 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
 நடப்பாண்டில் ரூ.57 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் 30 பள்ளிகளில் அதிக காற்றோட்ட வசதியுடன் கூடிய வகுப்பறை கட்டடப் பணிகளும், ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட 4 கால்நடை மருந்தக கட்டிடங்களும், கடலோர பேரிடர் குறைப்பு திட்டத்தின்கீழ் ரூ.62 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 23 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டடங்களும், ரூ.29 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரத்தில் யாத்ரிகர்கள் தங்கும் விடுதி கட்டடமும், ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசுத் துறைக்கான 7 அலுவலக கட்டடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.  ரூ.2 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய மாணவ மாணவியருக்கான 3 விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கும், புதிதாக உருவாக்கப்பட்ட கீழக்கரை வருவாய் வட்டத்திற்கு ரூ.2 கோடியே 62 லட்சம் மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
       கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில்  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை கட்டமைப்பினை மேம்படுத்திடும் நோக்கத்தில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் காலங்கள் போற்றும் வகையில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் கட்டுமானப் பணிகள் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். செய்தியாளர் பயணத்தில் ராமநாதபுரத்தில் ரூ.58 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி பயன்பாட்டில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை உறை விந்து வங்கி கட்டிடத்தினையும், திருப்பாலைக்குடியில் கட்டப்பட்டு வருகின்ற ரூ.2 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற பல்நோக்கு புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தினையும், பழனிவலசையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ்; ரூ.1 கோடியே 62  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பள்ளி கட்டிடத்தினையும், இரணியன்வலசையில் ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற சமுதாய கூட வடிவமைப்பு கொண்ட பல்நோக்கு புகலிடக் கட்டிடத்தினையும் கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் காண்பித்து, திட்டப் பணிகளை விளக்கி கூறினார். செய்தியாளர்கள் பயணத்தில் பொதுப்பணித்துறை கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட செயற்பொறியாளர் அ.தினகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் தி.குருதிவேல்மாறன், உதவி பொறியாளர்கள் ஆர்.பாண்டியராஜன், வி.அருண், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து