மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பாவை நீக்கியது செல்லாது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

வியாழக்கிழமை, 24 ஆகஸ்ட் 2017      மதுரை
rajancellappa

மதுரை, -            மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பாவை நீக்கி டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                       மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக வி.வி.ராஜன்செல்லப்பா மறைந்த முதல்வரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். தற்போது மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வி.வி.ராஜன்செல்லப்பா மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதற்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
      இந்த நிலையில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான் என்ற செல்வம், நீதிபதி மற்றும் புறநகர் மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா நீக்கப்பட்டதாக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது எனவும் அவர் தொடர்ந்து புறநகர் மாவட்ட செயலாளராக தொடர தங்களது ஒட்டுமொத்த ஆதரவை தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
       இந்த கூட்டமுடிவிற்கு பின்னர் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
                         அ.தி.மு.க.என்ற மாபெரும் இயக்கமும் தமிழகத்தில் நடைபெற்று வரும் அம்மாவின் அரசுக்கும் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.நிர்வாகிகளும், மதுரை வடக்கு தொகுதி நிர்வாகிகளும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். கட்சியின் தலைமை நிலைய செயலாளர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சிப்பணியையும், ஆட்சிப்பணியையும் சிறப்பாக செயலாற்றி வருகிறோம். அவருக்கு மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் முழுஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
                தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஜாமீனில் வெளிவந்தபோது அவரை சந்தித்த எம்.எல்.ஏ.க்களில் நானும் ஒருவன். ஆனால் தற்போது அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தினகரன் நற்குணமும், ஈகை குணமும் படைத்தவர் தான். அம்மாவிடம் உதவியாளராக இருந்தவர். கட்சியைவிட்டு நீக்குவதிலும், மீண்டும் சேர்பதிலும் எனக்கு பலபடிப்பிணைகள் உண்டு. எம்.ஜி.ஆரும், அம்மாவும் என்னை கட்சியிலிருந்து பலமுறை நீக்கிஉள்ளார்கள். அதே போல் கட்சியில் சேர்த்தும் உள்ளார்கள். இப்படிப்பட்ட ஏற்ற தாழ்வுகளை சந்தித்தவன் நான்.
              தற்போது டி.டி.வி.தினகரன் என்னை நீக்குவதில் அவசரப்பட்டுவிட்டார், உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட என்னை போன்றவர்களை நீக்க சசிகலா ஒப்புதல் கொடுக்க எந்த வாய்ப்பும் இல்லை. துணைப்பொதுசெயலாளர் அங்கீகாரத்தை அ.தி.மு.க.பொதுக்குழு தினகரனுக்கு இதுவரை கொடுக்க வில்லை. எனவே அவரது அறிவிப்பை பொறுப்படுத்த தேவையில்லை.
                கட்சியும், ஆட்சியும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒ.பன்னீர்செல்வம் அணி இணைந்ததை வரவேற்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிரும்,புதிருமாக தேர்தலை சந்தித்தோம். அவற்றையெல்லாம் மறந்து ஆட்சியும், கட்சியும் நிலைக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்து வருகிறோம். இந்த நேரத்தில் என்னை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இதற்கு சசிகலா ஒப்புதல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். எந்த வகையில் அவர் ஒப்புதல் கொடுத்தார் என்பது தெரியவில்லை.
                தற்போது டி.டி.வி.தினகரனை ஆதரிக்கிறோம் எனக்கூறும் எம்.எல்.ஏ.க்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி என்று கூறிவிட்டால் ஒட்டுமொத்தமாக உள்ள 19 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் ஓடி வந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளார்கள். இவர்களால் அ.தி.மு.க.ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து அ.தி.மு.க.ஆட்சி தமிழகத்தில் நீடித்து 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து