கோம்பைப்பட்டி ஊராட்சியில் தூய்மையேசேவை உறுதிமொழி

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
btl news

வத்தலக்குண்டு - வத்தலக்குண்டு கோம்பைப்பட்டி ஊராட்சியில் தூய்மையேசேவை உறுதிமொழி எடுத்து கிராம ஊராட்சி ஆணையாளர் விஜயசந்திரிகா துப்புரவு பணியை துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊராட்சியில் தூய்மையேசேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம ஊராட்சி ஆணையாளர் விஜயசந்திரிகா தலைமை தாங்கினார். கோம்பைப்பட்டி ஊராட்சி செயலர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். அதன் பின்பு  இன்று முதல் மகாத்மாகாந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெற உள்ள தூய்மையே சேவை இயக்கத்தில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து அதன் மூலம் சுத்தமான சுகாதாரமான புதிய பாரத்தை உருவாக்க கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள் சுகாதார நிலையங்கள் தொடர்வண்டி நிலையங்கள் பேருந்து நிலையங்கள் நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மைக் கடைபிடிப்போம். வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறைகளைக் கட்டுவதுடன் அவ்வாறு கழிப்பறைகள் கட்டாதவர்களையும் கழிப்பறைகள் கட்டச் செய்து திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களும் நகரங்களும் உருவாக்க பாடுபடுவோம், கழிப்பறை பயன்படுத்துவதுடன் கை கால்களை சுத்தமாகக் கழுவுதல் மற்றும் இதர சுகாதார பழக்கங்களையும் கடைபிடிப்போம். குறைத்தல் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கோட்பாட்டின்படி திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் சின்னான், கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் ஜான்அன்பரசு, காசிராஜன் மற்றும் கல்லூரி மாணவர்கள் கோம்பைப்பட்டி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் கையுறைகள், முகஉறை, குப்பை அள்ளுவதற்கான சாதனங்கள், துடைப்பான்கள் வழங்கப்பட்டது. கோம்பைப்பட்டி ஊராட்சி முழுவதும் துப்புரவு பணிகள் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து  பகுதியிலும் கிருமி நாசினிகள் தொளிக்கப்பட்டு சுகாதாரம் முழுமையாக பாதுகாக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி செயலர்கள் மணிகண்டன், செல்வக்குமார் நன்றி கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து