திருவண்ணாமலையில் தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் கொள்ளை: 2 மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலையிலுள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் தங்க நகை, பணத்தை இரண்டு மர்ம ஆசாமிகள் நேற்று அதிகாலை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தங்க நகை கொள்ளை

திருவண்ணாமலை சாரோன் கணேசபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (61), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், இவரது மனைவி பிரேமா (58), இவர்களது மகன் அருண்குமார் (30), இவருக்கு திருமணமாகி சென்னையில் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கரன், பிரேமா ஆகிய இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக்கொண்டு சென்னையிலுள்ள மகன் வீட்டுக்கு சென்றனர். நேற்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தம்பதிஇருவரும் வீடு திரும்பினர் அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே செல்ல முயன்றபோது வீட்டுக்குள் இருந்த 2 மர்ம நபர்கள் கையில் கத்தியுடன் வந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த தம்பதி இருவரும் திருடன் திருடன் என கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதைப் பார்த்த மர்ம ஆசாமிகள் பீரோவை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் பிரேமாவுக்கு மயக்கம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். வீட்டிலிருந்த இரும்பு பெட்டி, பீரோ ஆகியவற்றை உடைத்து அதிலிருந்த 36 சவரன் நகை, 250 கிராம் வெள்ளிப்பொருட்கள் ரூ. 13 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாஸ்கரன் திருவண்ணாலை நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையடித்துச் சென்ற கும்பலின் ஒருவன் சிவப்பு நிற டிசர்ட்டும் லுங்கியும், மற்றொரு நபர் பேண்ட் சட்டை அணிந்திருந்தார்களாம். இதையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியில் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். இருப்பினும் மர்ம ஆசாமிகள் சிக்கவில்லை. இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சிறிது நேரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

அதேபோல் திருவண்ணாமலை புதுத் தெருவிலுள்ள ஒரு வீட்டிலும் நேற்று காலை திருட்டு முயற்சி நடந்துள்ளது. திருவண்ணாமலை நகரில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 6 இடங்களில் திருடு சம்பவங்கள்நடந்துள்ளது. ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை சிக்கவில்லை. இதனால் நகர பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து