கூவம் ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது : மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தகவல்

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      சென்னை

கூவம் ஆற்றுப்படுகையில் ஆக்கிரமிப்பு வீடுகள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்றி மாற்று ஏற்பாடாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு அழைத்து செல்லும் பணி பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

 ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் கூறியதாவது:– சென்னை நதிகள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆற்றுப்படுக்கையில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்ததன் அடிப்படையில், நீர்வழித்தடங்களான கூவம் மற்றும் அடையாறு பகுதிகளில் மறுசீரமைப்பு செய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காகவும், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கும், நிலையில்லாத கட்டுமான குடியிருப்புகளில் இருக்கும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 24.10.2017 அன்று அண்ணாநகர் மண்டலம், வார்டு 107, கூவம் ஆற்றுப்படுகையில் 108 ஆக்கிரமிப்பு வீடுகள் கண்டறியப்பட்டு அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு தகுந்த மாற்று ஏற்பாடாக பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வழங்கப்பட்டது.

கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது அண்ணாநகர் மண்டலம், வார்டு 107ல் 825 வீடுகள் ஆற்றுப்படுகையில் இருப்பது கண்டறியப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து நேற்று தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 109, கூவம் ஆற்றுப்படுகையில் 171 ஆக்கிரமிப்பு வீடுகள் கண்டறியப்பட்டு, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு தகுந்த மாற்று ஏற்பாடாக பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.ஒரு வாகனத்திற்கு 4 நபர்கள் வீதம் 80 பணியாளர்கள் மற்றும் 20 லாரிகளும், இந்தக் குடும்பங்களுக்கு 3 நாட்களுக்கு தேவையான உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து 58 பள்ளி மாணவர்கள், 9 கல்லூரி மாணவர்கள் பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இப்பணியின் போது ஏதேனும் சிகிச்சை தேவைப்படும் என்பதனை கருத்தில் கொண்டு மருத்துவ முகாமும் நடைபெற்று வருகிறது.பொதுமக்களின் ஒத்துழைப்போடு இப்பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு அப்பகுதி பொதுமக்களின் ஒத்துழைப்போடு இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்களை கண்டறிவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் விண்ணப்பங்கள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்களின் ஆய்வுக்குப்பின் தகுதி வாய்ந்தவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது காவல்துறை, வருவாய்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை போன்ற துறைகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, துணை ஆணையர் (பணிகள்) எம்.கோவிந்த ராவ், திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையாளர் பிரவேஷ் குமார், மண்டல அலுவலர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து