முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடத்திட்ட மாற்றம் குறித்து 7 நாட்களில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒன்று முதல் பிளஸ்-2 வரையிலான பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு 7 நாட்களில் கருத்து தெரிவிக்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

நேரடி கருத்து கேட்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது., 1 முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இந்தியாவிலேயே நான்கு மாதத்தில் புதிய பாடதிட்டம் உருவாக்கப்பட்டுள்ள புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம் 20, 21 ஆகிய நாட்களில் சென்னை கலைவாணர் அரங்கில் பாடத்திட்ட மாற்றம் குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் இதே போன்று மதுரை, தஞ்சை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மண்டலங்கள் நேரடியாக கருத்துக்கள் கேட்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் சிறந்த மாணவர்களை உருவாக்கும் வகையில் எந்தவகையான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்க திட்டமிட்டோம்.

பிளஸ் 2 படிப்பை முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்க உத்தரவாதம் வழங்கும்வகையில் பாடத்திட்டம் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.tnscert.org. வரைவு பாடத்திட்டம் வகுப்பு வாரியாக பாடவாரியாக இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சிறுபான்மை மொழிகளில் பாடதிட்டம் மொழிபெயர்த்து வழங்கப்படும்.

7 நாட்கள் தெரிவிக்கலாம்

பாடத்திட்டம் குறித்து பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை 7 நாட்கள் தெரிவிக்கலாம். சிறந்த கருத்துக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, புதிய பாடதிட்டத்தில் திருத்தம் செய்யப்படும். புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வரும் ஜனவரி மாதத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இந்த கல்வியாண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும். இதைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் மற்ற வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் அமுலுக்கு வரும் கற்ற கல்வியை மறக்காமல் இருக்கும் வகையில் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் வகுக்கப்படும். மேற்கு வங்கத்தை போல பாலியல் விழிப்புணர்வுக்கான கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து