முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பது குறித்து, மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்ததாவது:

ஆலோசனைக் கூட்டம்
 

கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க மாநில அளவில் செயல் திட்டம் உருவாக்கப்பட்டு, அது அரசால் அனுமதி அளிக்கப்பட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் மூலம் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, செயல்படுத்திட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.  இந்த செயல் திட்டத்தினை நடைமுறைப்படுத்த மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் கோட்ட அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழிக்க இச்செயல் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் துறைகளும் தங்களது பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை பணிக்கு அழைத்துச் செல்லும் ஏஜன்டுகள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  அரசு சாரா நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்களை ஒழிக்க பாடுபடும் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து கொத்தடிமை தொழிலாளர் முறையினை ஒழிக்க செயலாற்ற வேண்டும்.

இச்செயல் திட்டத்தின் மூலம் கொத்தடிமை தொழிலாளர்களாக கண்டறியப்பட்டு, விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடி மறுவாழ்வு நிவாரணமாக ரூ.20,000- வழங்கப்படுகிறது.  மேலும் அவர்களுடைய மறுவாழ்விற்காக கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.1,00,000- வரையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொத்தடிமை தொழிலாளர்களாக கண்டறியப்பட்டால் ரூ.2,00,000-மும், அதிகமான இன்னலுக்கு ஆளாக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.3,00,000-மும் மறுவாழ்வு நிதியாக வழங்க அரசு அனுமதியளித்துள்ளது.மேலும், மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு அரசால் இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, வங்கி கணக்கு மற்றும் குழந்தைகள் கல்வி கற்க இலவச கல்வி, அவர்களுடைய பணித்திறன் அதிகரிக்க திறன்வளர் பயிற்சி,  வசிக்கும் இடங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை, மற்றும்  சுதந்திரமாக வாழ அனைத்து வகையான மறுவாழ்வு திட்டங்களும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்துத்துறை அலுவலர்களும் கொத்தடிமை தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு கிடைக்க வேண்டிய அனைத்து அரசின் திட்டங்களும்  அவர்களுக்கு சென்றுசேர ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் ஜி.ராமு மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து